கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இளைஞர் பலவந்தமாக ஜீப்பொன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருகுணு பல்லைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அந்தணி வெரங்க புஷ்பிக என்ற இளைஞரே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மாபெரும் ஆர்ப்பாட்டம்
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஒன்றிணைவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் வெடித்தது மற்றுமொரு போராட்டம்! கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள் |
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த இளைஞர் கலந்து கொண்டதையடுத்து ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போது GC 0342 என்ற இலக்கத்தை கொண்ட நீல நிற ஜீப் வண்டியில் வந்த சிலர் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதனை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் அவதானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விமானத்தில் இளைஞரொருவர் கைது
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டது ஏன்...! |
குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அவரைக் கைது செய்ய பொலிஸார் தேடிக் கொண்டிருந்த நிலையில் தானிஷ் அலி தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வெளிநாட்டிற்கு செல்லப் புறப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.