சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுரேஷ் சலேக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள்
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்நிலையில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி , தாயார் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.