இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை கண்டு திகிலடைந்தோம் : சர்வதேச தீர்ப்பாய நீதிபதிகள்
இலங்கையின் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறை மனித வாழ்க்கையை கண்டு திகிலடைந்ததாக பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய நீதிபதிகளின் சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றியும், தொழிற்சங்கங்களின் சாட்சியங்களையும் கேட்ட பின்னர் இந்த கருத்தை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதி மேம்பாட்டு சபை
இலங்கைத்தீவு தேசத்தின் மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளாக தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மாத்திரம், தேயிலை ஏற்றுமதியிலிருந்து இலங்கையின் வருவாய் மொத்தம் 1.3 பில்லியன் டொலர்களாகவும், இறப்பர் ஏற்றுமதி 930 மில்லியன் டொலர்களாகவும் இருந்தது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். நவீன நாகரிக உலகில் இதுபோன்ற நடைமுறைகள் தடையின்றி தொடர்கிறது என்ற விடயம், தீர்ப்பாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று சர்வதேச நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மத்திய கண்டி மாவட்டத்தை தளமாகக் கொண்ட ஒரு தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தீர்ப்பாயம், மத்திய மற்றும் இலங்கை முழுவதும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் சாட்சியங்களை கடந்த வாரம் நேரில் பெற்றுக்கொண்டது.
இந்த தீர்ப்பாயத்தில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஏ.பி. ஷா ,(A.P. Shah) நேபாளத்தைச் சேர்ந்த பவன் குமார் ஓஜா( Pawan Kumar Ojha) மற்றும் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி சிரானி திலகவர்தன( Shiranee Tilakawardane) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மருத்துவ பராமரிப்பு இன்மை
பெருந்தோட்ட தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள், வேலையில் அவர்கள் சந்திக்கும் பல சவால்களை இந்த தீர்ப்பாயத்தின் முன் பகிர்ந்து கொண்டனர், அவர்களின் அன்றாட ஊதியத்துடன் பிணைக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை என்பன இதில் உள்ளடங்கியிருந்தன.
அட்டைக்கடி மற்றும் குளவி தாக்குதல்கள், அதே நேரத்தில் மருத்துவ பராமரிப்பு இன்மை என்பன பற்றியும், நாட்டின் நெருக்கடியைத் தொடர்ந்து வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில் செலவினங்களைக் குறைக்க தனது குடும்பத்தினர் நிவாரண உணவுகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மூன்று வேளை உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றோம் மற்றும் ஒரு கோப்பை பால் தேநீர் வாங்க முடியவில்லை என்று 20 வருடங்களாக பெருந்தோட்டத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தீர்ப்பாயத்தின்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணையின் முடிவில், பெருந்தோட்ட தொழிலாளர்கள், நடைமுறையில் ஒரு மனித தன்மைக்கு குறைந்த வாழ்க்கையை(sub-human life) வாழ்கிறார்கள், நிச்சயமாக இது கண்ணியமான வாழ்க்கை இல்லை என்று நீதிபதி ஏ.பி. ஷா குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்த ஊதியம்
அதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மையத்தில் நாளாந்த ஊதியம் இருப்பதைக் கவனித்த தீர்ப்பாயம், தொழிலாளர்கள் "மோசமான ஊதியம், ஊதிய உயர்வில் மிக மெதுவான முன்னேற்றம் மற்றும் அப்பட்டமான ஊதிய அதிகரிப்பின்மைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தாமதமின்றி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1,700 ரூபாய் ஊதியம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு அரசு உட்பட அனைத்து தரப்பினரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் பெருந்தோட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நியாயமற்ற நடைமுறைகளையும் தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |