தமிழினப் படுகொலையை சர்வதேச அங்கீகாரத்துக்கு முன்னெடுத்துச்செல்லும் ரேணுகா இன்பகுமார்
இலங்கையில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படாத முள்ளிவாய்க்கால் நினைவு தினம், புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச ரீதியில் அதனை நினைவு கூறுகின்றனர் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எனப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் இளம் தமிழ் செயற்பாட்டாளரான ரேணுகா இன்பகுமாரின் நேர்காணலை குறித்த ஊடகம் செய்தியாக தொகுத்துள்ளது.
தமிழீழ இனப்படுகொலை
ரேணுகா தனது 10 ஆவது வயதில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்காக போராடத் தொடங்கியுள்ளார்.
தற்போது 21 வயதாகும் அவர், தமிழீழ இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளின் கதைகளைப் பகிர்ந்துகொள்ளவும் தனது குரலை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.
2009 ஆம் ஆண்டு, 25 ஆண்டுகளாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களால் உந்தப்பட்டு, வடகிழக்கில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திரத் தமிழ் அரசை நிறுவ போராடியுள்ளனர்.
இந்த உள்நாட்டுக் கலவரத்தின் போது, ஈழத்தமிழ் சமூகம் மரணங்கள், துன்புறுத்தல்கள், மற்றும் தீர்க்கப்படாத காணாமல் போனவர்கள் போன்ற துன்பங்களை எதிர்கொண்டுள்ளது.
ரேணுகா, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, தமிழீழ இனப்படுகொலைகளின் சர்வதேச அங்கீகாரத்திற்காகவும், இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் தொடர்ந்து உரையாடல்களை உருவாக்குவதற்காகவும் நீண்ட காலமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இப்போது, வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை சட்டம் - கலைப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள ரேணுகா தனது வாழ்க்கையில், தனது சமூகத்திற்கு ஆதரவான மாற்றத்தை சுயாதீனமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் "நான் என் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஈழத்திற்கு சென்றதில்லை, எனினும் அந்த வார்த்தையை மட்டும் என்னால் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்" என்று ரேணுகா குறிப்பிட்டுள்ளார்.
you may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |