தமிழ் மக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கம்! அமலராஜ் அமலநாயகி சுட்டிக்காட்டு
தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கு உப தலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அடாவடித்தனமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்து அவர் இன்றையதினம்(27.9.2026) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கை இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறான கோர முகத்தை அரசு காட்டுகின்றது.
இருவேறு சட்டங்கள்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை அகற்றியிருப்பது, இந்நாட்டில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதையே காட்டுகிறது.

இதனைக் கண்டித்து, நாளை(28.9.2026) பிற்பகல் 2:30 மணியளவில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.