நினைவுகூரல் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்: - முன்னாள் போராளி
உயிரிழந்தவர்களை நினைவுகூர்தல் சமூக ஒருமைப்பாட்டுக்கும், அரச தரப்பு படைகளுடன் மீள் இணக்கத்திற்கான ஒப்புரவுக்கும் வழிவகுக்கும் என முன்னாள் போராளியான அரவிந்தன் (Aravindan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முள்ளிவாய்க்கால் நினைவு நாள், தமிழரின் பேரழிவின் ஒரு முக்கிய நாளாக கணிக்கப்படுகிறது. இதன் விம்பமாக போராட்டத்தில் உயிர் துறந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாளும் அமைகிறது.
இந்த நினைவுகூர்தல் ஈடு செய்ய முடியாத உயிர் இழப்புகளுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஒருமித்த புலம்பல் அல்லது ஒப்பாரியாக அமையும் போது ஒருவரையொருவர் தாங்கும் ஆதரவு பலமாகவும் அமையும்.
அது சமூக ஒருமைப்பாட்டுக்கும், முக்கியமாக அரச தரப்பு படைகளுடனும் மீள் இணக்கத்திற்கான ஒப்புரவுக்கு வழிவகுக்கும்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை மறுப்பு, தமிழ் மொழி உரிமை, நிலவுரிமை, தமிழின அழிப்பு இனக்கலவரங்கள், தமிழராட்சி மகாநாடு மனித இழப்புக்கள் எனப் பல இருந்தது.
அதற்கு பின்னரான தமிழ்ச் சமூகம் 1978 விடுதலைப் புலிகள் தடைச்சட்டம், அதன் தொடர்ச்சியான 1979 பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால பிரகடனம் என இன்றைய தமிழ் இனத்தை தேசிய ஒடுக்குமுறையால் வடிவமைத்தது.
1983 இனச் சங்கார ஆக்ரோசமும் தமிழ் மக்களை நம்பிக்கையை இழக்கச்செய்தது. குறிப்பாக 67 படுகொலை பட்டியல்கள் 2000 முடியும் வரை நடந்தேறியது.
படுகொலைகள் ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்தால் நாளுக்கு நாள் கடையடைப்பும், ஹர்த்தாலும் என நாட்டை அரசியல் - பொருளாதார ரீதியாக அழித்துவிடும். மீள் இணக்கத்திற்கான சமூக சூழ்நிலையையும் சீரமைக்க முடியாமல் போய்விடும்.
நாட்டில் இல்லாத உரிமையை தமிழ் மக்கள் கேட்கவில்லை. சிங்கள மக்களுக்கு (ஜே.வி.பி.யினருக்கு) அளித்த உரிமையின் அடிப்படையில், பாரபட்சமின்றி தமிழருக்கும் அளிக்க வேண்டிநிற்கின்றோம்.
அத்துடன் குடும்பத்தினரால் கையளிக்கப்பட்டோர் என்பவர்கள் இன்னும் பாதுகாப்பாக இருகின்றார்களா? எங்கு இருக்கின்றார்கள்? என்ற பதிலைக்கூட இத்தனை வருடங்களாக அரசு சொல்ல முடியாது இருப்பது பாரதூரமான அரசாட்சிக்கான குறைபாடாக இருந்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு வழங்க கூடிய உரிமையை இழந்து நிற்கின்றது.
தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை, பாதுகாப்பு படையினரிடம் இருந்தும், நீதித்துறையிடம் இருந்தும், சட்டவாக்கதுறையிடம் இருந்தும் கிடைக்காதது இறுதியில் சர்வேதேச சுயாதீன நீதியைநோக்கி செல்ல வைத்துள்ளது.
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கண் துடைப்புக்கு மாத்திரமே என்ற எண்ணம் மக்களிடையே வளர்ந்து வருகின்றது. பொறுப்புக்கூற முடியாத தலைமைகள், இந்த பொறுப்பில் இருந்து அகற்றப்படுவதும் நிலைமாற்று கால நீதியின் கடமையாக உள்ளது.
நிலைமாற்றுகால நீதி நல்லிணக்க முயற்சிகள் என்பது மோதலில் ஈடுபட்ட இருசாராரும் சேர்ந்து எடுக்கும் நல்லெண்ண முயற்சியாகும். இந்த முயற்சியை முன்னெடுப்பதில் போரில் வென்றவர்கள் தான், இந்த தார்மீக கடமையை செய்வதில் முன்வரவேண்டும்.
நல்லிணக்க வேலைத்திட்டத்தில் இருந்து இலங்கை அரசு விடாப்பிடியாகப் பிரிந்து செல்வது, இலங்கை அரசின் தார்மீக வீழ்ச்சிக்கும், சர்வதேச அந்நியமாக்கலுக்கும் வழிவகுக்கின்றது.
இதனால் பாதிக்கப்படப் போவது இலங்கையில் வாழும் எல்லா மக்களும் தான். ஆகவே, எல்லா நாட்டுப்பற்றுள்ள மக்களும், தங்கள் நலனை காப்பாற்ற காலம் தாமதிக்காமல் முன் வரவேண்டும்.
இலங்கை அரசு மாத்திரமின்றி, தமிழ் மக்களும் நினைவூரல் வேலைத்திட்டங்களை முள்ளிவைக்கால் அல்லது மாவீரர் நினைவுதினத்துக்குள் முடக்க முடியாது.
அதற்கு முன்னர் நடந்த படுகொலைகளும், கூட்டுக்கொலைகளும், சித்திரவதைகளும், பாலியல் கொடுமைகளும் மன்னிக்கமுடியாத சர்வதேச குற்றங்களாகக் கருதப்படுகின்றது.
இலங்கை அரசு கடந்தகால சிங்கள இளைஞர்களுக்கு காட்டிய நல்லிணக்கம் தமிழருக்கு காட்டாமல் இருப்பது இனப்பாகுபாடு இன்னும் அழியவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
உண்மையை கண்டறிதல் என்ற நிலைமாற்று நீதியின் முதல் கடமை நடக்காமல், மற்ற விடயங்களை அரசாங்கம் முன்னெடுப்பது, குறிப்பாக நல்லிணக்கம், புதிய அரசியல் சாசனம், கட்டமைப்பு மாற்றங்கள் என்பன வருத்தத்தை அறியாமல் வைத்தியர் கொடுக்கும் மருந்து நஞ்சுக்கு சமம். அது ஆளையும் கொன்றுவிடும். தீர்வையும் கொன்றுவிடும் என தெரிவித்துள்ளார்.



