அரசாங்கத்தின் நிவாரண திட்டம்: விண்ணப்பதாரிகள் தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டத்தில் இணைந்து கொள்ள இதுவரை 23 லட்சம் பேர் வரையானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 6லட்சத்தி 24 ஆயிரத்து 741 பேரின் தகவல்கள் தற்போதைக்கு அதற்கான இணையத்தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளன.
ஏனையோரின் தகவல்களை துரித கதியில் தரவேற்றுவதற்கான செயற்பாடுகள் நாடெங்கிலும் உள்ள 314 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நிவாரண ஒருங்கிணைப்பு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள்
முன்னதாக இலங்கையின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை 3.3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டிருந்தது.
எனினும் கோவிட் பரம்பல் காரணமாக மேலும் 6.6 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்திருந்தது.
இதன் பிரகாரம் இலங்கையில் தற்போதைக்கு அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான குடும்பங்களின் எண்ணிக்கை 3.69 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிவாரணத்திட்டம்
இவர்களைப் பதிவு செய்தல் மற்றும் நிவாரணம் வழங்கல் தொடர்பான முன்னோடித் திட்டமொன்று அண்மையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பொதுமக்கள் பாரியளவில் கலந்துகொண்டு அரசாங்க அதிகாரிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரசாங்கத்தின் நிவாரணத்திட்டம் ஆறு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது