இந்தியர்களுக்கான பயண கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ள இங்கிலாந்து
இந்தியர்கள் இங்கிலாந்து வரும்போது 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பின் ஹோட்டல்களில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கோவிட் அச்சுறுத்தல் எல்லை மீறியதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவை சிகப்பு பட்டியலில் உள்ளடக்கி இருந்தன.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்தும் விமானங்களை இயக்குவதற்கு தடை விதித்திருந்ததுடன்,இந்தியாவில் இருக்கும் தமது நாட்டு பயணிகளையும், பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தின.
இதேபோல் இங்கிலாந்தும் இந்தியாவை கோவிட் அதிகம் உள்ள நாடு (சிகப்பு பட்டியல்) என்ற பட்டியலில் வைத்திருந்த நிலையில்,தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் கட்டாயம் இல்லை
முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து வரும்போது ஹோட்டலில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதே வேளையில், இந்தியாவில் தடுப்பூசி போட்டு இந்தியாவிலிருந்து வரும் அனைவரும் வீட்டிலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட இடத்திலோ தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
கோவிட் பரிசோதனை அவசியம்
இன்று உள்ளுர்நேரப்படி 4 மணி முதல் இந்த தளர்வுகள் அமுலுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவில் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்தல் தேவையிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு இந்தியர்கள் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
லொகேட்டர் படிவம் நிரப்ப வேண்டும்
இங்கிலாந்து சென்ற பின்னர் 2 கோவிட் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதேபோல் பயணி இருப்பிடம் அறியும் லொகேட்டர் படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.