ஓ.எம்.பி அலுவலகத்திடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்த கோரிக்கை
சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்தி விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ' வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தற்போதைய நிலை, எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
பிரச்சினையை முடிக்கப் பார்க்கிறீர்கள்
இதன் போது கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது?
இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில் விடுவித்திருக்க வேண்டும்.
அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.
நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து, நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை. நீங்கள் எங்களிடம் ஒப்படையுங்கள்! அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல் ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக் கொள்ளுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது
இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.

சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு, நீங்கள் வெளிப்படுத்துங்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆபத்தான நபர்..! பல மணிநேரம் வாக்குமூலமும் பதிவு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9