வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் (VIDEO)
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று (10) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியினை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக பழைய பேருந்து நிலையப்பகுதியை அடைந்து நிறைவுற்றது.
குறித்த போராட்டத்தின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : சதீஸ்
மன்னார்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) காலை 10 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ஆஷிக்
யாழ்ப்பாணம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன.
இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அண்மையில் பாகிஸ்தானுக்கு 30 ஆயிரம் கண்கள் தானம் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான தகவலையும் வடபகுதி கரையோரங்களில் மிதக்கும் சடலங்கள் தொடர்பாகவும் கேள்வியெழுப்பினர்.
போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன் போது பங்கேற்றுவுள்ளார்.
போராட்ட நிறைவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (10) நடைப்பெற்றுள்ளது.
தொடர்ந்து போராட்ட இடத்திலிருந்து நடைபவணியாகச் சென்று திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாகச் சென்று அங்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது உறவுகளை மீட்டுத்தர ஐ.நா. சபையும், அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுத்ததோடு, திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் ஒன்றிணையும் கையளித்திருந்தனர்.


