இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான கட்டணங்கள்! வெளியானது விபரம்
மோட்டார் வாகனங்களின் முதல் பதிவு உட்பட அனைத்து சேவைகள் தொடர்பான மோட்டார் போக்குவரத்து கட்டணங்களும் நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த திங்கட்கிழமை (14.11.2022) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.
பதிவு கட்டண விபரங்கள்
இதன்படி, சாதாரண அடிப்படையில் மோட்டார் வாகனத்தின் தற்காலிக உரிமையாளராக ஒருவர் பதிவு செய்வதற்கான கட்டணம் 1000 ரூபா, முன்னுரிமை அடிப்படையிலான கட்டணம் 2000 ரூபா மற்றும் ஒரு நாள் அடிப்படையில் கட்டணம் 3000 ரூபாவாக இருக்கும்.
சாதாரண அடிப்படையில் பதிவை ரத்து செய்வதற்கான கட்டணம் 1000 ரூபாவாகவும், முன்னுரிமை அடிப்படையில் ரத்து செய்ய 2000 ரூபாவும் மற்றும் ஒரு நாள் அடிப்படையில் ரத்து செய்ய 3000 ரூபாவும் அறிவிடப்படும்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பு
ஒருவரை ஒரு மோட்டார் வாகனத்தின் புதிய உரிமையாளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் அத்தகைய மோட்டார் வாகனத்தின் உடமை மாற்றத்திலிருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அத்தகைய மோட்டார் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரால் தானாக முன்வந்து மாற்றப்பட்டதாக கருதப்படும்.
இதன்படி ஒவ்வொரு நாளுக்கும் கூடுதல் தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டும். சாதாரண அடிப்படையில் ஒரு பதிவை ரத்து செய்வதற்கும், மோட்டார் வாகனத்தின் இடைநீக்கத்தை அகற்றுவதற்கும் கட்டணம் 1000 ரூபாவாகவும் முன்னுரிமை அடிப்படையில் 1500 ரூபாவாகவும், ஒருநாள் அடிப்படையில் 2000 ரூபாவாகவும் அறவிடப்படும்.
மோட்டார் வாகனப் பதிவேட்டில் உள்ள முழு உரிமையாளரின் பெயரை நீக்குவதற்கு பொதுவாக 1000 ரூபாவும், முன்னுரிமை அடிப்படையில் 1500 ரூபாவும், ஒரு நாள் அடிப்படையில் 2500 ரூபாவும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.