பெரும்பான்மை மக்களில் மாற்றம் வரும் வரை எந்த ஒரு ஆட்சி மாற்றத்தையும் செய்யமுடியாது: முஸம்மில் மொஹிதீன்
பெரும்பான்மை மக்களில் மாற்றம் வரும்வரை தமிழ் பேசும் மக்களால் எந்த ஒரு ஆட்சி மாற்றத்தையும் செய்ய முடியாது என தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
''தற்போதைய அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை நம்பி தமிழ் பேசும் மக்கள் நிதானமாகச் செயல்படுவது காலத்தின் தேவை.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி மற்றும் எதிர் தரப்பினர் இந்த அரசை உடனடியாக கலைக்க ஆர்வம் காட்டவில்லை.
திடீர் என நாடாளுமன்றத்தில் 2/3 எடுத்து மீதி காலத்தில் மக்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அரசைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது என்பது அவர்கள் தெரிந்த விடயம் என்பதால் இவர்கள் அனைவரும் எதிர்வரும் 2024 தேர்தலை நோக்கிய சுயநல சிந்தனையுடன் காலத்தைக் கழிக்க நகர்கின்றனர் என்பது தெளிவாகிறது.
இது சம்பந்தமாக அண்மையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கூறி உள்ளார். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் வெறுமனே ஒரு உல்லாச நிகழ்ச்சி நிரலாக மாற்றம் பெற்று வருகிறது என்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் கேகாலையில் நடாத்திய பெண்கள் போராட்டத்தில் தெளிவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிரூனிக்கா பிரேமச்சந்திர பகிரங்கமாக இது பற்றி கூறியிருந்தார்.
ஆகவே சிறுபான்மை நாம் பல வழிகளில் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். அரசியல் மாற்றம் எமக்கு தேவை இருந்தும் நாம் ஆர்வக்கோளாறு கொண்டவர்கள் பட்டியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து.
இங்கு மேலும் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இலங்கையின் எதிரணி அரசியல் செய்யும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்து வரும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு ஒற்றுமை போக்கு வரும் வரை தற்போதைய இந்த கொடூர ஆட்சியை உடனடியாக கவிழ்த்த ஒருபோதும் முடியாது.
எதிரணியினரின் பலவீனம் தொடருமானால் ராஜபக்ச குடும்ப ஆட்சிக் காலம் முடியும் வரை அவர்களின் அட்டகாச ஆட்சியைக் கொண்டு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆகவே நாம் சிறுபான்மை முஸ்லிம் தமிழ்ச் சமூகம் மிகவும் கடுமையாகச் சிந்தித்துச்
செயல்படுவது சிறந்தது என்பது எனது கருத்தாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.