கொட்டும் மழையில் கொழும்பில் வெளிநாட்டு அகதிகள் போராட்டம்!
ஈரானைச் சேர்ந்த அகதிகள் குழுவினர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR) முன் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
“2018/19 இல் இந்த நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஐநா அகதிகள் நிறுவனம் சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. எனினும், நாங்கள் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக இங்கு சிக்கித் தவிக்கிறோம்.
நாங்கள் அதிகாரிகளிடம் பேச முற்படும் போதெல்லாம், அவர்கள் எங்களது வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் அவர்கள் எங்களுகு்கு கொடுக்கும் ஒரே பதில். இதுதான் அவர்கள் பேசும் சமத்துவமா? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகதி ஒருவர் கூறினார்.
கணவனிடமிருந்து பிரிந்து இலங்கையில் தங்கியிருக்கும் அகதி தனது மகளுக்கு எந்த விதமான கல்வியையும் வழங்க வழியில்லை என்று கூறினார். "எங்கள் குழந்தைகள் ஏழு வருட கல்வியை இழந்துவிட்டனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான ஏழு வருட வாழ்க்கையை எப்படி சரிசெய்வது என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், எங்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். தயவுசெய்து எங்கள் குடும்பங்களைச் சந்திக்க உதவுங்கள்,
அமெரிக்கா அல்லது கனடாவுக்குச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், இதனால் அங்கு வசிக்கும் எங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து எங்கள் சிதைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்யலாம், ”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மற்றும் ஒரு அகதி கருத்து வெளியிடுகையில்,
“நாங்கள் மழையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னால் நின்றிருந்தாலும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் யாரும் எங்களுகு்கு பதிலளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
