அரச ஊடகங்களின் சீர்திருத்தங்கள்: சீனாவுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தல்
இலங்கையின் மூன்று அரச ஊடக நிறுவனங்கள் தொடர்பில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறு எப்.எம்.எம் என்ற சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களில் இலங்கை அரசு ஊடகங்கள் தொடர்பான ஒப்பந்தமும் இருப்பதாக அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இருதரப்பு ஒப்பந்தம்
எனினும் இந்த ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் விபரங்கள் எதனையும் வெளியிடத் தவறிவிட்டது என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு ஆகிய மூன்று அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களுக்கும், அவற்றின் நிதி இழப்புகள் காரணமாக, ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நிறுவனங்களை நிதி ரீதியாக நிலையானதாக மாற்றுவது அவசியமானதாக இருந்தாலும், இந்த மறுசீரமைப்பிற்கான ஒரு குறிப்பிட்ட திட்டம் இருந்தால், அதை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.