பிரித்தானியாவில் பி.சி.ஆர் சோதனைக்கான கட்டணம் குறைப்பு! - அரசின் அறிவிப்பு வெளியானது
சர்வதேச பயணத்திற்கான தேசிய சுகாதார சேவையின் கோவிட் பரிசோதனைக்கான கட்டணம் இன்று முதல் ஒவ்வொன்றும் 88 பவுண்ட்சில் இருந்து 68 பவுண்ட்ஸாக குறைக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, பசுமைப்பட்டியல் நாடுகளிலிருந்தோ அல்லது ஆபத்தான பட்டியல் (அம்பர் பட்டியல்) நாடுகளில் இருந்தோ திரும்பும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் பிசிஆர் சோதனைக்கு 20 பவுண்ட்ஸ் குறைவாக செலுத்த வேண்டும்.
அந்த வகையில், பயணி இங்கிலாந்திற்கு வந்த பிறகு அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக சோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் ஆபத்தான நாடுகளின் (அம்பர் பட்டியல்) பட்டியல் இருந்து திரும்பி வருபவர்களுக்கான பி.சி.ஆர் கட்டணம் 170 பவுண்ஸில் இருந்து 136 பவுண்ட்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு மற்றும் எட்டு நாட்களில் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 93 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேலும் 39,047 பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதுடன், 166,952 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,254,399 ஆக உயர்ந்துள்ளதுடன், இரண்டாவது அளவை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,372,981 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தின் ஆர் எண் நேற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த எண்ணிக்கை இப்போது 0.8 மற்றும் 1 க்கு இடையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.