உள்ளூராட்சி மன்றங்களின் செலவினங்களைக் குறைக்க விசேட நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றங்களின் தொடர்ச்சியான செலவினங்களைக் குறைப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் 2024ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு கடன் நிதிச் சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சூரிய சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான அரசின் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து, கிராமப்புற இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப கல்வியறிவை அதிகரிக்க, நூலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து கடன் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மேலும், 2024ஆம் ஆண்டு இதற்கென 1115 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 50 உள்ளூராட்சி மன்றங்களின் இது தொடர்பான மானிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வணிக வங்கிகளின் வட்டி விகிதத்தை விட குறைந்த விகிதத்தில் இந்த நிதியத்தின் மூலம் கடன் வழங்கப்படுவதால், இதன் செயற்பாடுகள் எளிதில் கிராமப்புறங்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும் என்றும் பிரதமர் தினேஷ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |