மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கை! 2 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்குவலை மீட்பு
மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று (20.10.2026) மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வலைகள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மற்றும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்கப்பட்டு வருவதால் மீன்வளம் அழிவடைந்து வருவதாக சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்காக அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்துக்கு முன்னாள் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த அமைப்பினர் கடற்படையின் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த சட்டவிரோத சுருக்குவலை தொடர்பான தகவல்கள் மற்றும் அனுசரணைகளை வழங்கியதையடுத்து கடற்படையின் விசேட நடவடிக்கை நேற்று (20.10.2026) கல்லடி கடற்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையில் கடற்படை குழுவினர் காலை 9 மணிக்கு காத்தான்குடி தொடக்கம் மாங்காடு வரையிலான கடற்பரப்பில் சோதனை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தனர்.
இதன்போது சட்டவிரோத சுருக்குவலைகள் நான்கினை கைப்பற்றி மீட்டு கல்லடி கடற்படை முகாமிற்கு மற்றும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
