புதுக்குடியிருப்பு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு (Video)
புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த (11.10.2022) கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (19.10.22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித எச்சங்கள் மீட்பு
புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது தடையவியல் பொலிஸார், மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை
சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய
அதிகாரி தொடர்பில் பகுப்பாய்வு நடத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு
பணித்துள்ளார்.
இதேவேளை இந்த மனித எச்சம் காணப்பட்டுள்ள வளவில் 2009 இறுதிப்போர் நேரத்தில் விடுதலைப்புலிகளின் மருத்துவமனை ஒன்று இயங்கியதாகவும் அந்த மருத்துவமனை மீது விமானதாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மனித எச்சம் காணப்பட்டுள்ள வளவில் மருத்துவமனை ஒன்றில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மருத்துவ கழிவு பொருட்கள் பல சிதறி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக செய்தி:கே .குமணன்