பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் வீட்டில் சடலமாக மீட்பு: காத்தான்குடியில் சம்பவம் (photo)
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது எனக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி03, குதா வீதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய பதுர்தீன் சுபைக் அகமட் எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு தூக்கத்துக்குச் சென்றிருந்த குறித்த இளைஞர், இன்று காலை உரிய நேரத்துக்குப் தூக்கத்திலிருந்து எழும்பாத நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து உறவினர்கள் காத்தான்குடிப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து காத்தான்குடிப் பொலிஸார் குறித்த வீட்டுக்கு விரைந்து ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விடயத்தைக் காத்தான்குடிப் பொலிஸார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீட்டர் போலின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டார்.
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பிணையில் விடுதலை
சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் அண்மையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்று பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.