இலங்கையின் பொருளாதாரத்தில் மேல் மாகாணத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் முதன்மையான பங்களிப்பாளராக மேல் மாகாணம் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் தமது பங்கை, 2021 இல் 42.6 சதவீதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு 43.4 சதவீதமாக அதிகரிப்பதன் மூலம் அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டது.
மத்திய வங்கியினால் நேற்று(27.12.2023) வெளியிடப்பட்ட மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டு அறிக்கைகள் இதனை காட்டுவதாக கூறப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
இந்தநிலையில் 2022 இல் பொருளாதாரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பங்களிப்பாளர்களாக வடமேல் (11.2 சதவீதம்) மற்றும் மத்திய (10.0 சதவீதம்) மாகாணங்கள் பதிவாகியுள்ளன.
மேற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்புகள் 2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு மாறாமல் இருந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளில் வடமேல் மாகாணம் 18.3 சதவீத பங்களிப்புடன் அதிக பங்களிப்பை பதிவு செய்துள்ளது.
அதே சமயம் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் 14.6 சதவீதம் மற்றும் 13.7 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.
2022 இல் 49.2 சதவீத பங்களிப்பைப் பதிவுசெய்து, மேல் மாகாணம் தொழில்துறை நடவடிக்கைகளில் மிகப்பெரிய பங்களிப்பாளராக காணப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கை
மேலும், மொத்த தொழில் நடவடிக்கைகளில் வடமேல் (11.8 சதவீதம்) மற்றும் மத்திய மாகாணங்கள் (9.1 சதவீதம்) அடுத்த முக்கிய பங்களிப்பாளர்களாக இருந்துள்ளன.
சேவை நடவடிக்கைகளின் அடிப்படையில், மேல் மாகாணம் 45.2 சதவீத பங்களிப்புடன் அதன் மேலாதிக்கத்தைத் தொடர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மத்திய (10.0 சதவீதம்) மற்றும் வடமேல் (9.8 சதவீதம்) மாகாணங்கள் காணப்படுகின்றன.
தொழில்துறை நடவடிக்கைகளை பொறுத்தவரை, அதிக செறிவு மேல் மாகாணத்தில் (34.4 சதவீதம்), இருந்துள்ளது.
அதைத் தொடர்ந்து வடமேல் மாகாணத்தில் (32.0 சதவீதம்) தொழில்துறை நடவடிக்கைகள் அதிக செறிவைக் கொண்டிருந்தமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான பங்களிப்பு ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு (17.2 வீதம்) மற்றும் ஊவா (15.5 வீதம்) மாகாணங்களில் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |