மலையகத் தமிழ் சமூகத்திற்கு தேசிய இனமாக அங்கீகாரம்
இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஒரு வருடத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட நடைபயணத்தின் பத்துக்கும் மேற்பட்ட ஆரம்பக் கோரிக்கைகளில் இரண்டிற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத் தமிழர்கள்
மலையக தமிழ் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக, தாம் விடுத்த கோரிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மலையக சிவில் சமூக கூட்டிணைவின் ஏற்பாட்டாளர் அந்தனி ஜேசுதாசன் தெரிவிக்கின்றார்.
"மாண்புமிகு மலையகம் நடை பயணத்தில் நாம் 11 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அவற்றில் மூன்று கோரிக்கைகளில் இரண்டு நிறைவேறியுள்ளதாக குறிப்பிட முடியும்.
மலையக மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொண்டு மலையகத் தமிழர்கள் அல்லது மக்கள் என பொதுவான எல்லா இடங்களிலும் குறிப்பிட வேண்டுமென்ற கோரிக்கை விடுத்திருந்தோம், இது வெற்றியளித்துள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கைகள்
சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிட வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென கோரியிருந்தோம்.
ஆகவே இந்தியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
2024 பெப்ரவரி 15ஆம் திகதி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு 338 தனிநபர்கள் மற்றும் 60 அமைப்புகளின் பெயர்களுடன் “மலையக மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் தொடர்பாக” என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், அரசாங்க நியமனங்கள் மற்றும் அமைச்சரவை முடிவுகளில் கூட மலையகத் தமிழர் என்ற அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இத்தகைய பின்னணியில், இலங்கையில் அவர்களுக்கென ஒரு தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், P8 இனம் தொடர்பான பகுதியில் "மலையகத் தமிழர்கள்" என அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கீழ் காணப்படும் வகையில் நாங்களும் எங்கள் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.” என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |