முடிவு பிழை என்றால் இதுவே நடந்திருக்கும்: இலங்கையில் உள்ள கனடா உயர்ஸ்தானிகரை மீள் அழைக்காத காரணம்
கனேடிய உயர்ஸ்தானிகர் இமாலய பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வாங்கி டுவிட்டரில் பதிவிட்ட முடிவு பிழையென்றால் அவரை கனேடிய அரசாங்கம் உடன் மீள அழைத்திருக்கும் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இமாலயப் பிரகடனம் தொடர்பில் இலங்கை வந்த போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களை உள்ளடக்கியது இந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி. அது மட்டுமல்ல அந்த கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பான்மையானவர்கள் பௌத்த குருமார்களை சார்ந்தவர்கள்.
அப்படியிருக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு தேசிய கலந்துரையாடலை உருவாக்கப் போகின்றோம் என்று கூறும் போது ஒரு பெரும்பான்மை கட்சியை ஆதரிக்கும் மக்களை தவிர்த்து ஒரு தேசிய கலந்துரையாடலை உருவாக்கினால் அது கெட்டித்தனமா? அதனடிப்படையில் தான் சகல கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் போது மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தோம்.
கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதி கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகர் இமாலய பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வாங்கி இது ஒரு நல்ல விடயம் என்பதை தானும் டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஆகவே கனேடிய அரசாங்கத்தின் ஆதரவு நிலைப்பாடு இந்த டுவிட்டர் பதிவு மூலம் புலப்படுகிறது. ஏனென்றால் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறாக இருக்கும் போது உயர்ஸ்தானிகர் இப்படி செய்திருந்தால் உடனடியாக அவரை மீள அழைத்திருப்பார்கள்.
அப்படி நடைபெறவில்லை. ஆகவே இந்த வேலைத்திட்டத்திற்கும் இந்த இமாலய பிரகடனத்திற்கும் இந்த கலந்துரையாடல் நடக்க வேண்டும் என்பதற்கும் கனேடிய அரசாங்கம் ஆதரவளிக்கிறது என்பது தெட்டத்தெளிவாக இருக்கின்றது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |