பிரதான விகாரைகளில் மின் கட்டண அதிகரிப்புக்கு காரணம் குளிரூட்டி (Full Ac) வசதிகள்
இலங்கையில் உள்ள பிரதான பௌத்த விகாரைகளில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டி (Full Ac) சாதனங்களே அவற்றின் மின் கட்டணங்கள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.
பிரதான விகாரைகளில் குளிர்ரூட்டி வசதிகள்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள விகாரைகளில் மாத்திரமல்லாது வெளியிடங்களில் உள்ள பிரதான பௌத்த விகாரைகளிலும் இதே நிலைமையை காணக்கூடியதாக இருப்பதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமய வழிப்பாட்டு இடங்களுக்கு ஒரு அலகு மின்சாரம் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. விகாரைகளில் அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான மின் கட்டண பட்டியல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை அவற்றின் மின் கட்டணங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும் அண்மையில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதால், விகாரைகளின் மின் கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
இதனால், பல பிரதான விகாரைகளின் விகாராதிபதி இந்த கட்டண உயர்வுக்கு கடும் கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
சூரிய மின் கலங்களை பொருத்த வசதிகள் இல்லை
இதனிடையே கொழும்பில் உள்ள பிரதான பௌத்த விகாரை ஒன்றுக்கு சூரிய மின் உற்பத்தி கலங்களை பொருத்துவதற்காக தொழிநுட்ப நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
விகாரையில் உள்ள அனைத்து குளிரூட்டிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்கள் பயன்படுத்தப்படுமாயின் சூரிய மின உற்பத்தி கலங்களை பொருத்த விகாரையில் இடவசதி இல்லை என தொழிநுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் உள்ள பல பிரதான பௌத்த விகாரைகளில் வசிக்கும் முக்கியமான பிக்குமார் ஆடம்பரமான கார்கள் உள்ளிட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.