புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அளித்த இரகசிய வாக்குறுதிகள்.. நினைவுபடுத்திய தமிழ் அமைப்பு! - அதிர்ச்சித் தகவல்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புலம்பெயர் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டன் போராட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை இன்று (26.11.2025) சந்தித்து கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் பேசுகையில்,
“டில்வின் சில்வா வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது, போராட்டக்காரர்கள் அவரை தடுத்ததை நாம் பார்க்கவில்லை.
2012 போராட்டம்
2012ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டமொன்று நடத்தப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்சவின் மரணமே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த இடத்தில இன்னொரு 10 நிமிடங்கள் மகிந்த இருந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், டில்வினுக்கு எதிரான போராட்டம், மிகவும் மென்மையான முறையில் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், வடக்கின் பயங்கரவாதிகளுக்கும் தெற்கின் பயங்கரவாதிகளுக்கும் இடையே சகோதரத்துவ தொடர்புகள் உள்ளன.
தம்மால் செய்ய முடியாத ஒன்றை செய்தமையால் வடக்கின் பயங்கரவாதிகள் தெற்கின் பயங்கரவாதிகளுக்கு மதிப்பளிக்கின்றனர். இந்த அரசாங்கம் இராணுவத்தினரை அவமதித்தது.
விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியதை நியாயப்படுத்தியது. அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டமையால் அரசாங்கம் மீது தென்னிலங்கை சிங்களவர்கள் சற்று அதிருப்தியடைந்தனர்.
கனேடிய தமிழ் காங்கிரஸ்
மீண்டும் சிங்கள மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, டில்வினுக்கு எதிரான லண்டன் போராட்டம் நடத்தப்பட்டது என நாம் நினைக்கின்றோம்.
அல்லது இது உண்மையாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் என வைத்துக்கொண்டால், நிலைமை இன்னும் மோசமானது.

அதாவது, அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துச் செய்தியொன்றை கூறியிருந்தது.
அந்தச் செய்தியில் நாங்கள் எங்கள் கடமையை செய்துவிட்டோம், இனி நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என கூறப்பட்டிருந்தது.
அப்போது, வாக்குகளை பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக வெளிப்படுத்துங்கள் என நான் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கூறியிருந்தேன். ஆனால், அதற்கு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.
போராட்டக்காரர்களின் கோபம்
இதனையடுத்து, நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதையடுத்து மீண்டும் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் 6 வாக்குறுதிகளை கனேடிய தமிழ் காங்கிரஸ் சுட்டிக்காட்டியிருந்தது.
பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளே அவையாகும்.

லண்டன் போராட்டம் உண்மையெனில், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையே போராட்டக்காரர்களின் கோபத்துக்கு காரணமாக இருக்கும்.
தெற்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றது போல் வடக்கு மக்களை ஏமாற்ற முடியாது. 'புலி வாலை பிடித்தது போல' என்ற வாக்கியம் பழமொழிக்காக மட்டும் கூறப்படவில்லை.
இப்போது அரசாங்கம் புலி வாலை பிடித்து விட்டது. புலி வாலை கைவிட்டால் அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |