பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள்: வைத்தியர் சரவணபவன்
கோவிட் தொற்றால் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் எனவும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுமாறும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் (Saravanapavan) தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களிற்கான மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சைனாபோம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.
அதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.
எனவே எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனை தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான 3ம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
ஆகவே, 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் பின்னடிக்காமல் தற்பொழுது வழங்கப்படும் சைனாபோம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்.
அவர்களிற்கும் எதிர்காலத்தில் 6 மாதம் முடியும் காலத்தில் பைசர் தடுப்பூசி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்க சந்தர்ப்பம் உள்ளது.
ஆகவே, பைசர் தான் வேண்டும் என்று இருக்காமல் முதல் இந்த ஊசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொண்டு 6 மாத நிறைவில் பைசர் வழங்கப்படும்.
அதேவேளை தற்பொழுது நோய் நிலை குறைந்துள்ள நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதே நேரம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், எதிர்காலம் எப்படியாக அமையும் என்று உறுதியாக கூற முடியாது. தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நாடுகளில் மீண்டும் நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே இந்த இடைவெளியை பாவித்து அனைவரும் முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வூசியை போடாதவர்கள் போட்டுக் கொள்ளவும்.
வீடுகளிலிருந்து வர முடியாதவர்கள் தகவல் வழங்கினால் வீடுகளிற்கு வந்து தடுப்பூசியை செலுத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இந்த ஒரு இருமாத இடைவெளியை பாவித்து தடுப்பூசிகளை செலுத்தி தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது தடுப்பூசி போடாது இருப்பவர்கள் 20 வீதமானவர்கள் இருக்கின்றார்கள். அவர்களும் முன்வந்து இரண்டாவது தடுப்பூசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தலாம்.
ஏனெனில், முதலாவது தடுப்பூசி அவர்களை பாதுகாக்கும் என முடிவு செய்ய முடியாது.
இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டு மூன்றாம் தடுப்பூசி வழங்குவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், இரண்டாவது தடுப்பூசி நீண்ட காலத்திற்கு பாதுகாப்பினை வழங்காது.
ஆகவே அந்த அடிப்படையில் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது. மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அனைவருக்கும் கிடைக்கும் என்பதால் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பாடசாலை மாணவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 வீதமான மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.
மிகுதியானவர்களும் பின்னிற்காமல் பாடசாலைகளிற்கு அல்லது சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்.
ஏனைய 20 வீதமானவர்கள் ஏன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்பது வினாவாக இருக்கின்றது. பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளது.
ஆகவே பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளிற்கான பாடசாலை ஆர்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இந்த நோய் பரவல் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காணப்படுகின்றது. ஆகவே, சுகாதார முறைகளை பின்பற்றி பாடசாலைகள் நடைபெற வேண்டும்.
அதேவேளை, பாடசாலைகளிற்கு காய்ச்சல், தடிமன் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களின் நோய் நிலையை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம். இதில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
