ரோஹித்தவை எதிர்த்து போட்டியிட தயார்! - நளின் பண்டார
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa), வடமேல்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ரோஹித ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். ஏனெனில் ரோஹித ராஜபக்சவின் கருத்தின்படி, அவர் கணிதபாடப் பேராசிரியராவார்.
எனினும், அந்தப் பட்டத்தை எங்கிருந்து பெற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், நான் கணிதபாடம் தொடர்பான கலாநிதியாவேன். அவர் அனுப்பிய ரொக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் நான் உருவாக்கிய சிறியளவிலான மின்னுற்பத்தி நிலையங்கள் இன்னமும் நன்கு இயங்குகின்றன. அதுமாத்திரமன்றி அவருக்கு வடமேல்மாகாணம் தொடர்பில் தெரியுமா என்றுகூடத் தெரியவில்லை.
ஆனால் நான் அப்பகுதி தொடர்பில் நன்கறிவேன். எனவே மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என்றுநாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பண்டோரா ஆவணத்தில் இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியிருக்கின்றது.
நிருபமா ராஜபக்ச முறைகேடான விதத்தில் சுமார் 35 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திரட்டியிருப்பதாக அந்த ஆவணத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இன்னமும் எதனையும் கூறாமல் அமைதியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.