வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைக்கப்பட்ட தமிழர்கள்: ரவிகரன் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (01) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
நீதி
எனவே விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வரவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்.
யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்புமுகாம்கள், கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.
வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்களை கொக்குத்தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கிய பாதையிலும் பேருந்துகளில் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
இலங்கைப் படையினரிடம்தான் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லையே அவர்கள் எங்கே என்று தேடுகின்றார்கள்.நீதிஅமைச்சரே நீதி தாருங்கள். நியாயப்படி நடந்து கொள்ளுங்கள்.
ஆய்வு
வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை விட்டு விட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாகவும் மக்கள் சொல்கின்றார்கள்.
வட்டுவாகல் தனித்தமிழ் சைவக்கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரியவிகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்தவர்களை கொண்டுசென்று, படுகொலைசெய்து புதைத்துவிட்டு அதன்மேல் இவ்வாறு பெரியவிகாரை இங்கு அமைத்துவிட்டதாத மக்கள் கூறுகின்றனர். உங்களின் மடியில் கனமில்லை என்றால் இதனை நிரூபியுங்கள்.
விகாரையை அகற்றி ஆழமாகத் தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக்கூடியதான நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கும் நீதியைத்தாருங்கள். சிலவேளை நீங்கள் நீதியைத்தரும்போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோதெரியாது.
ஆனால் இன்றைய அரசை நம்புவோம் இந்த விடயங்களுக்கு நீதிதாருங்கள் என்று கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தங்கமயிலுக்கு கிடைத்த வேலை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப மானம் போகப்போகுது! அடுத்த வார ப்ரோமோ Cineulagam
