விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை..
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுவிளையாட்டுக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் 07.08.2025 நேற்று இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
விளையாட்டுத்துறைசார்ந்து பல்வேறு குறைபாடுகள்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது மாவட்டங்கள்தோறும் இளைஞர்கழக சம்மேளனங்களைத் தெரிவுசெய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில் எமது முல்லைத்தீவு மாவட்டத்திலும் இளைஞர்கழக சம்மேளனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரதிஅமைச்சர் எரங்க குணசேகரவின் பங்கேற்புடன் மாவட்ட இளைஞர்கழகப் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இச்செயற்பாட்டை வரவேற்கின்றேன். இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுத்துறைசார்ந்து பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
கடந்தகாலத்தில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்ட பொதுவிளையாட்டுக் கட்டத்தொகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டம் கடந்த கால யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இளையோர் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கு சகலவசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுத்துறைசார்ந்து காணப்படுகின்ற குறைபாடுகள் தீர்த்துவைக்கப்படவேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது விளையாட்டுக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது விளையாட்டுக் கட்டடத்தொகுதி அமைப்பதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமககேவினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





