கொழும்பிலிருந்து வந்துள்ள விசேட நில அளவையாளர் குழு..! குருந்தூர்மலைக்கு விரைந்த தமிழர் தரப்பு
முல்லைத்தீவு குருந்தூர்மலைக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (07.10.2022) திடீரென சென்றுள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் குறித்த அளவீட்டை தடுத்து நிறுத்தும் நோக்கோடு அவர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வந்துள்ள குழு
கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட நில அளவையாளர் குழு ஏற்கனவே குருந்தூர் மலையை அண்டிய பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 632 ஏக்கர் காணிகளில் அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக அறிந்தே இவர்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
குறித்த இடத்திற்கு முன்னதாக இராணுவ வாகனம் ஒன்றும் பொலிஸாரும் வந்துள்ள நிலையில் அளவீட்டு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக வருகை தந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதுடன், அளவீடு இடம்பெறுவது தொடர்பில் அறிந்தே தாமும் வருகை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் குறித்த பகுதிக்கு கொழும்பிலிருந்து வந்ததாக கூறப்படும் அதிகாரிகள் எவரும் வருகை தரவில்லை எனவும், அளவீடுக்காக கொழும்பிலிருந்து வருகை தந்த 20 பேர் கொண்ட குழு ஒன்று முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டத்தரணி சுகாஸின் தகவல்
இதேவேளை குருந்தூர் மலையை பார்வையிட்ட பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட குழு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குருந்தூர்மலையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல் கிடைத்தது.
எனவே கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து நாம் குறித்த பகுதிக்கு விநை்து பார்த்த போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதாக உணர்கிறோம். இவ்வாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வந்த குழுவினர் முல்லைத்தீவிலேயே தொடர்ந்தும் முகாமிட்டு தங்கி உள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் இவ்வாறு ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வதை அனுமதிக்கப் போவது கிடையாது.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். எந்த வகையில் ஆக்கிரமிப்புகள் வந்தாலும் நாங்கள் ஒன்று கூடி எமது திரட்சியையும் எதிர்ப்பினையும் காட்டுவதன் மூலம் மட்டுமே எமது தாயக பூமியை பாதுகாக்க முடியும். அந்த வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்துகொண்டே இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்