தேசிய மக்கள் சக்தி அரசும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலை முன்னெடுத்துள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மத்திய அரசிற்குள் உள்ளீர்ப்பதனூடாக இந்த அரசாங்கமும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குள் உள்ளீர்த்து மாகாண நிர்வாக அலகுகளையும் அதிகாரங்களையும் பலவீனப்படுத்துவதன் ஊடாக மாகாணக் கட்டுமானம் என்ற ஒன்று தேவையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிடலாம் என்பது, மறுதலையாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதையே மீள வலியுறுத்தி நிற்கும் என்பதை இவ்வரசாங்கம் உணர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (14.11.2026) 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியல்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இணைந்த வடக்கு, கிழக்கு நிர்வாக அலகு வடக்கு, கிழக்காகப் பிரிந்தமை, எட்டு ஆண்டு காலமாக மாகாண சபை நடாத்தப்படாமல் மக்கள் சார்பாண்மை இன்றி மத்திய அரசின் ஏவல்களில் மாகாண நிர்வாக அலகுகளை கொண்டு நடாத்துகின்றமை, அவற்றினால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தி நிலையை சாதகமாக்கி மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மெல்ல மெல்ல நலிவாக்கி மத்திய அரசிற்குள் உள்ளீர்க்கின்றமை என இத்தீவில் இவ்வரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலுக்கு எனது வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குள் உள்ளீர்த்து மாகாண நிர்வாக அலகுகளையும் அதிகாரங்களையும் பலவீனப்படுத்துவதன் ஊடாக இறுதியில் மாகாணக் கட்டுமானம் என்ற ஒன்று தேவையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிடலாம் என்பது, மறுதலையாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதையே மீள வலியுறுத்தி நிற்கும் என்பதை இவ்வரசாங்கம் உணரவேண்டும்.
உரிய தீர்வு வழங்கல்
எனவே, அபிவிருத்தியின் போர்வையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுக்கும் நுண்ணரசியலை புறந்தள்ளி, வடகிழக்கில் அபிவிருத்தியோடு ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் இனப்பிரச்சினைக்கும் உரிய தீர்வை வழங்குவதில் இதயசுத்தியுடன் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

நிருவாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஆளணி வளத்தை சீராக்குவதற்கும், மாவட்ட பொது வைத்தியசாலைக்குரிய வள நிரப்பலை மேற்கொள்வதற்கும், உள்ளக பயிற்சி மருத்துவர்களை உட்சேர்ப்பதற்கும், மாவட்ட மக்களுக்கான பெரும்பாலான மருத்துவ சேவை வழங்கலை மாவட்ட மருத்துவமனைக் கட்டமைப்புக்குள்ளேயே வழங்குவதற்கும் உரிய தீர்வென்பது மருத்துவமனையை மாகாணத்தில் இருந்து மத்திக்கு மாற்றுவது தான் என்றால் மாகாணத்தில் இருந்து மத்திக்கு நீங்கள் உள்ளீர்த்த அத்தனை தேசிய பாடசாலைகளிலும் இப்போது தேனாறும் பாலாறுமா ஓடுகிறது என கேள்வி எழுப்பினார்.