தமிழர்கள் கொல்லப்பட்டது கொண்டாட்டம்! தமிழர்கள் எவ்வாறு இலங்கையர்களாக உணரமுடியும் - சபையில் முழக்கம்
1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களான உங்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணரமுடியுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (09.10.2026) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீதிக்காக காத்திருக்கிறோம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதனால் இன்று கொண்டுவரப்பட்டுள்ள இப்பிரேரணையை வரவேற்று பாதிக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாளராக, நாமும் வழிமொழிகிறோம். இதுவரை கிட்டாத நீதிக்காக 43 ஆண்டுகளாகியும் - எங்கள் ஒவ்வொரு சாட்சியும் மெல்ல மெல்ல வயது முதிர்ந்து காலமாகிச் செல்ல, எஞ்சியிருக்கும் சாட்சிகளோடு இன்றும் நீதிக்காக காத்திருக்கிறோம்!

ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்று போராடி பிரித்தானியரை வெளியேற்றி ஒன்றாகி அடைந்த ஒரு விடுதலை, பின்னாளில் தனித்த ஒரு பெரு இனத்துக்கு மட்டும் தானா?... என்று எம்மில் எல்லோருமே கேட்கின்ற அளவுக்கு இந்தத்தீவில் எங்களின் விடுதலை மீளப் பறித்தெடுக்கப்பட்டது. நாங்கள் நீண்ட காலமாக - மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கிறோம்.
காத்திருப்பதும், சொந்த நிலங்களில் இருந்து கலைக்கப்படுவதும், வன்முறையால் சொத்துகளும் உயிர்களும் அழிக்கப்படுவதும் தான் இத்தீவில் மாறி மாறி வந்த அரசுகள் எங்களுக்கு ஈந்திருப்பவை! இவையே ஈழத்தமிழர்களாக எங்களின் இறந்த காலமாயும் நிகழ்காலமாயும் மாறிப்போனது! தீவு முழுமைக்குமான உட்கட்டமைப்பு விருத்தியிலும் நிருவாக நடைமுறைகளிலும் குடிமக்கள் பொதுவாழ்விலும் ஒப்பீட்டளவில் கூடிய அக்கறையை எடுக்கின்ற இந்த அரசாங்கம் கூட, மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கும் ஈழத்தமிழினப் பக்கம் இன்னும் திரும்பவில்லை!
குடியேற்றத் திட்டம்
கல்லோயா குடியேற்றத் திட்டங்களுக்காக 1950 களில் நாங்கள் கொல்லப்பட்டதில் இருந்து 2009ஆம் ஆண்டில் போரியல் அறங்கள் வீழ, பன்னாட்டு நீதியும் சாக, பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இடத்திலும் குண்டுகள் போட்டு சாகடிக்கப்பட்ட எங்களுக்கான நீதியை - உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்று காணாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்கான நீதியை - எங்களுக்கு அரணாக நின்றதாலேயே இன்றளவிலும் சிறையில் வாடுகின்ற எங்களில் எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதியை என… ஓர் இனமாக - இத்தீவில் பிரித்தானியர் வெளியேறிய காலந்தொட்டு நீதிக்காக காத்திருக்கிறோம்!

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! எங்கள் பிள்ளை மைத்திரேயி இராமகிருஷ்ணன் தன்னை தமிழ் ஈழப்பெண்ணாகக் கூறிவிட்டார் என்றவுடனேயே இத்தீவில் சலசலப்பும் சமூக வலைத்தள எதிர்ப்புகளும் குவிந்துவிட்டன. நாங்கள் கொல்லப்பட்டதே உங்களுக்கு வெற்றியாகும் போது எவ்வாறு நீங்களும் நாங்களும் ஒன்றாக முடியும்! ஒரு கையால் மறுகையைத் துண்டிப்பதை வெற்றி எனலாமா! புலம்பெயர்ந்ததால் மைத்திரேயி சொல்லிவிட்டாள். புலம்பெயராத எங்களில் எஞ்சியோரையேனும் இலங்கையராக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவின் பெரும்பான்மை இனியேனும் தனது வாழ்வாகக் கொள்ளுமா என்றார்.
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி
சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் எப்படி இருக்கிறார்..! வெளிவந்துள்ள புதிய தகவல்
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan