குரங்குத்தம்பி நூலாசிரியரை பாராட்டிய ரவூப் ஹக்கீம்
மூத்த ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளரான கவிஞர் இக்பால் அலியின் குழந்தை இலக்கிய நூலான குரங்குத்தம்பி நூல் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauf Hakeem) "ஒரு வித்துவ நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் குழந்தைப் பருவத்திற்குச் சென்று அந்த நடையில் எழுதத் துணிவது என்பது அசாத்தியமான விடயம்" என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
குழந்தை இலக்கியம் படைப்பது இலகுவான விடயம் அல்ல. தாங்கள் வளர்ந்த பின்பு குழந்தைகளாக மாறி கவி படைப்பது என்பது ஒரு வித்தியாசமான கலை.
ஒரு வித்துவ நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் குழந்தைப் பருவத்திற்குச் சென்று அந்த நடையில் எழுதத் துணிவது என்பது அசாத்தியமான விசயம்.
மகாகவி பாரதியும் அப்படித்தான் குழந்தை இலக்கியம் படைத்தார்.அந்த வகையில் ஊடகவிலாளர் கவிஞர் இக்பால் அலி அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்று கண்டி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இரு நூல் வெளியீட்டு நிகழ்வு
அக்குறணை ஐடெக் கல்வி நிலையம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்திய எழுத்தாளர், ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி) குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த 23ஆம் திகதி நடைபெற்றிருந்த இந்த இரு நூல் வெளியீட்டு விழாவில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், கண்டி மாவட்ட அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தி யின் அமைப்பாளர் எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாணம்; முன்னாள் முதல் அமைச்சர், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மனித அபிவிருத்தி தாபனம், இயக்குனர், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம், சமய, சமூகப் பேச்சாளர். நெலும் ஆடைக் காட்சியகத்தின் உரிமையாளர் தேசமானிய முத்தையாப்பிள்ளை ஸ்ரீ காந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.
நூல் பற்றிய அறிமுகத்தை பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், அவர்களும் நயவுரையினை கவிஞர் ரா. நித்தியானந்தன், ஆசிரியை சர்மிளாதேவி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நூல் முதல் சிறப்புப் பிரதிகளைப் தொழிலதிபர் அல்ஹாஜ் டி. எம். எஸ். நிஸைஹிர் ஹாஜியார், மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், சந்திரவதனா ரட்ணராஜ குருக்கள் பெற்றுக் கொண்டார்.
திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள எழுத்தாளர்களும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்களின் பங்களிப்பு
இலக்கியத்துறையில் அரசியலாளர்கள் ஆர்வம் காட்டும் போது படைப்பிலக்கியத்துறை விரைவான ஆரோக்கியமான வளர்ச்சி நோக்கி முன்னகர்ந்து செல்லும்.
சமூக நலன் சார்ந்த சிந்தனை மிக்க நூல்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆரோக்கியமான சிந்தனைமிக்க ஆற்றலாளர்களை வளர்த்தெடுக்கவும் இது உதவும் என இக்பால் அலியின் இரு நூல் வெளியீட்டு நிகழ்வின் போதான அவதானிப்புக்களின் அடிப்படையில் சமூக விடய ஆய்வாளர் வரதன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நூல் வாசிப்புப் பழக்கம் குறைந்து செல்லும் இன்றைய சூழலில் நூல்களின் தோற்றம் வரவேற்கப்படுதல் என்பது மாற்றங்களை நோக்கிய நகர்வை விரைவாக்கிக் கொள்ளும் பாதை இப்போதும் இருப்பதை உணர்த்துவதாக கருத முடியும்.
தமிழர்களிடையே தங்களின் கடந்த கால வரலாற்றை தேடி ஆராய்வதோடு அவற்றை நிகழ்காலத்திற்கு பயனுடையதாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறான மாற்றங்களை மீண்டும் வரலாறாக்க வேண்டும்.இந்த முயற்சிக்கு நூலாக்கமும் நூல் வாசிப்பும் முக்கியமானது.
இந்நிகழ்வை நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் அரசியலாளர்களின் பிரசன்னம் வேகமான செயற்பாடாக்கிக் கொள்ள உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |