இரத்தினபுரி வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கஹவத்த பொமலு விகாரையை சேர்ந்த 69 வயதான நிலதுரே சாந்தசிறி தேரர் முதன்முறையாக இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
கஹவத்தை அலேகேவத்தையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய உறவினர் ஒருவரினால் அவருக்கு சிறுநீரகம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கடந்த 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வெற்றி
இது தொடர்பில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தம்மிக்க அழகப்பெரும கருத்து தெரிவிக்கையில்,
பல வருடங்களாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை இரத்தினபுரி லயன்ஸ் கழகத்தினால் வழங்கப்படுகின்றது.
விசேட வைத்திய நிபுணர்களான லக்ஸ்மன் வீரசேகர, சானக ஆராச்சிகே, கயான் பண்டார, மயக்கவியல் நிபுணர்களான அனுர பெர்னாண்டோ மற்றும் லக்ஷ்மி ரணசிங்க ஆகியோரின் முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை வைத்தியர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவில் இரண்டு வார பயிற்சியின் பின்னர் எமது வைத்தியசாலையின் சுமார் ஐந்து தாதியர்கள் இந்த சத்திரசிகிச்சைகளில் பங்குபற்றினர். இது எங்கள் வைத்தியசாலையின் ஒரு வெற்றியாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |