அனுராதபுரத்தில் வேகமாக பரவும் பூஞ்சை தொற்று - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
அனுராதபுரத்தில் டீனியா என அழைக்கப்படும் பூஞ்சை தொற்று நோய் வேகமாக மக்களுக்கு மத்தியில் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இதுவொரு தோல் அரிப்பு நோய் என அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
பூஞ்சை தொற்றிற்கு பயன்படுத்தப்படும் மருந்துடன் வேறு சில மருந்துகளை சேர்த்து பயன்படுத்தியதன் காரணமாகவே அவை வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சருமத்தில் திடீரென ஏற்படும் அடையாளங்களே இந்த தொற்றின் பிராதான அறிகுறியாகும். வெள்ளையாக இருப்பவர் ஒருவருக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த அடையாளம் ஏற்படும்.
உடலில் அதிகம் வியர்க்கும் இடங்களிலேயே இந்த தொற்று ஏற்படும். விசேடமாக முகத்திலும் ஏற்படும்.
இவை உடலில் ஏதாவது ஒரு இடத்தில் ஏற்பட்டால் இரவில் கடுமையாக அரிப்பு ஏற்படும். அதனால் காயமாக மாற கூடும்.
பூஞ்சை தொற்று என்பது காயம் ஏற்படும் ஒன்றல்ல. எனினும் அரிப்பதனால் இந்த காயம் ஏற்படுகின்றது.
இவை தொடுதல் மூலமே பரவுகின்றது. இந்த தொற்றுள்ள ஒருவரின் ஆடைகளை இன்னும் ஒருவர் பயன்படுத்தினால் அவருக்கு பரவும்.
இதற்காக மருந்து உள்ளது. எல்லா இடங்களிலும் மருந்து பெற்றுக்கொள்ள வேண்டாம்.அதற்கான மருத்துவரிடம் மாத்திரம் சென்று மருந்து பெற்று பயன்படுத்தி வந்தால் 6 வாரங்களுக்குள் குணமடைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.