ரணில் தவறிழைக்க மாட்டார்: நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதில் தவறிழைக்கமாட்டார் என நம்புகின்றேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்சக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்தவேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன்.
ஜனாதிபதி தேர்தல்
எனவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அதில் அவர் தவறு இழைக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.
மேலும், தேர்தல்களைப் பிற்போட நாம் அனுமதிக்கமாட்டோம். குறிப்பாக பிரதான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தியே தீர வேண்டும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.
ஆகவே, ஜனாதிபதியிடம் இதனைத் தெரிவித்துள்ளோம். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தே ஆக வேண்டும். மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் வெளிப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |