சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் - ஜனாதிபதியாக இன்று பதவியேற்கும் ரணில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இரவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடாக பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று காலை சபாநாயகரால் ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அறிவிக்கவுள்ள நிலையில், சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக உள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
இதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தால், கொழும்பின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
24 மணி நேரங்களுக்கு கூட ஜனாதிபதியாக ரணில் செயற்பட கூடாது என மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது. அவ்வாறு நடந்தால் கோட்டாபயவுக்கு நடந்த போராட்டம் ரணிலுக்கு எதிராகவும் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.