ரணிலின் சிம்மாசன பிரசங்கம் இந்தியாவின் இதயத்தில் அறையப்பட்ட ஆணி
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிம்மாசனப் பிரசங்கம் நிகழ்த்தினார்.
அவரின் உரையானது இலங்கை உள்ளக அரசியலின் போக்கிலும் அதன் வெளிவிவகார, ராஜதந்திர நடவடிக்கையிலும் பெரிதும் மேற்குலகம் சார்ந்தே இருக்கும் என்பதை வெளிப்படையாக வெளிக்காட்டி நிற்கிறது.
அத்தோடு அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்தப் போவதாக பிரகடனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவரின் உரையின் கூர்மையான பக்கங்களை அரசியல் மயப்படுத்தி தெளிவுபடுத்துவது அவசியமானது.
அவர் தன்னுடைய உரையில் "ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்துவமான மத, மொழி, உரிமைகளும் சுதந்திரமும் உண்டு" என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால் அதனைத் தொடர்ந்து "பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதற்கும், அதற்கேற்ப புத்தசாசனத்தை பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நான் அரசியலமைப்பு ரீதியாக கடமைப்பட்டுள்ளேன்" என கூறுகிறார்.
இலங்கை ஒரு பௌத்த அரசு
பௌத்தத்தை முதன்மைப்படுத்துவது என்பது வேறு. ஆனால் "பௌத்த சாசனத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும்" என்பது இலங்கை ஒரு பௌத்த அரசு என்பதை பறைசாற்றுவதாகும்.
பௌத்த சாசனமே இலங்கையின் எழுதப்படாத யாப்பு. அதுவே பௌத்த மகா சங்ககத்தின் ஊடாக வெளிப்படுவதுதான் இலங்கை அரசியல் வழக்கு. அதனை நடைமுறைப்படுத்துவதாகவே இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர்.
எனவே அவருடைய கூற்றிலிருந்து கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதிகள் போன்றே சிங்கள பௌத்த பேரினவாத போக்கிலேயே ரணிலும் தொடர்ந்து ஆட்சி செய்வார் என்பது இங்கே பிரகடனப்படுத்தப்படுகிறது.
அரசியலமைப்பை தமிழர் எதிர்ப்பதும், அது தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதுவும், அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதுவும் தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினை.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பு
இதனால்தான் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பை தந்தை செல்வா ஏற்க மறுத்தார்.
நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்து யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் முதலாம் குடியரசு யாப்பை தீயிட்டு எரித்து தமிழ் மக்களுடைய எதிர்ப்பை தெரிவித்தமை இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியலமைப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்பதனாற் தான் சாத்வீகப் போராட்டமும் அது சாத்தியப்படாத பட்சத்தில் ஆயுதப் போராட்டமும் தோற்றம் பெற்றன.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்
பெரும் தியாகத்திலும் அர்ப்பணிப்பின் மூலமாக உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தம். அதன் மூலம் குறைந்தபட்சமாக தமிழர்களுக்கான ஒரு பிராந்தி அலகை உருவாக்க 13ஆம் திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.
அதன் ஊடான மாகாணசபை தீர்வுத்திட்டம் வரையப்பட்டது. மாகாண சபைக்கான காணி, பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களும் அரசியல் திருத்தச்சட்ட மூலமாக எழுத்து வடிவில் வரையப்பட்டது.
ஆனாலும் அது கடந்த 34 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் அதனுடைய அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு எதனையும் நிர்வகிக்க முடியாதவாறு சிங்கள ராஜதந்திரம் செயற்பட்டது. ஒரு மாகாண அரசாங்கத்தை இரண்டு முறைகள் நடத்தி பார்த்து தோல்வி அடைந்திருக்கிறது.
எனினும் "அரசியல் யாப்பின்படி நான் நடப்பேன்" என கூறும் ஜனாதிபதி அந்த யாப்பில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச தீர்வு பற்றியாவது இந்த உரையில் குறிப்பிடவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளாத இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நீங்களே கையெழுத்திட்டு உருவாக்கிவிட்டு, அதற்கேற்றபடி அரசியல் யாப்பில் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீங்களே வரைந்துவிட்டு, அதனையும் நடைமுறைபடுத்தாமல் அதற்கு எதிராக தொடர்ந்து கடந்த 34 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கும் நீங்கள் இப்போது "நான் அரசியல் யாப்பின்படி ஒழுகுவேன்" என ஜனாதிபதி ரணில் குறிப்பிடுவது விசித்திரமானது.
அந்த வகையில் பார்த்தால் தமிழ் மக்களுக்கான, தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான எந்த ஒரு தீர்வு திட்டத்தையும் ரணில் விக்ரமசிங்க கொண்டிருக்கவில்லை என்பதை இது தெளிவாக சுட்டி நிற்கிறது.
அத்தோடு இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து இன்றைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டும் என அழைப்பு விடுவது வேடிக்கையானது.
சிங்களத் தரப்பு தாம் பலவீனமாக இருக்கின்ற போது தமிழ் மக்களுக்கு கொடுக்காத எந்த உரிமைகளையும் பொருளாதார ரீதியில் பலமடைந்த பின் எவ்வாறு இவர்கள் கொடுப்பார்கள் என்பதே இங்கே கேள்விக்குரியது.
இந்த நிலையிலும் தமிழ் அரசியல் தலைமைகள் தேசிய அரசாங்கம் என்றும், அனைத்து கட்சி அரசாங்கம் என்றும், அதில் பங்கேற்றப் போகிறோம் என்றும் கூட்டங்களையும், மகா நாடுகளையும் நடத்தி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்துடன் கைகோர்ப்பதும், ஒத்துழைப்பதும். பதவிக்கான பிச்சா பாத்திரம் ஏந்துவதைப் போன்ற ஒரு தமிழின துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இலங்கை அரசியலில் முதன்முறையாக அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்தப் போவதாக. திட்டவட்டமாக அறிவிப்பு செய்வதாக ரணிலின் உரை அமைந்துள்ளது.
இன்றைய உலகின் பூகோளமயமாக்கல் என்பது கட்டுப்பாடற்ற சந்தைகளைத் திறந்துவிட்டு தனியார் மயப்படுத்தலேயாகும். தனியார் மயமாக்கல் என்பது தேசிமயமாக்கல்களுக்கு எதிராக அல்லது பதிலாக அனைத்து துறைகளையும் அந்நிய மயமாக்கல், உள்நாட்டு தனியார் மயமாக்கல் என்பவற்றை உள்ளடக்கியதே ஆகும்.
அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயப்படுத்தப்படல்
இத்தகைய ஒரு வெளிநாட்டு கொள்கையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இது இலங்கையில் உள்நாட்டில் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், விவசாய உள்ளீடுகளுக்கான மானியம் போன்ற பொதுத்துறைகளும் தனியார் மயப்பட்பட்டுவிடும்.
இத்தகைய அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. தற்போதைய நிலையில் உடனடியாக சிங்கள மக்களுக்கு தேவைப்படுவது பெட்ரோல், எரிவாயு, மருந்து, பால்மா, பாண், பருப்பு போன்றவற்றை வழங்குவதற்கு வேறுவழி இல்லை என்ற நிலையில் உடனடியாக இதனை அவர்கள் ஏற்றுக் கொள்வர்.
எனவே இதன் தாக்கத்தை உடனடியாக அவர்கள் உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சிறிது காலத்துக்குள் இதன் தாக்கத்தை உணர்வர். எப்போது அவர்கள் தனியார் மயமாக்களின் தாக்கத்தை உணர்கிறார்களோ அப்போது அது ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக மாறும்.
அவ்வேளை சிங்கள மக்கள் தனியார் மயமாக்கலை நிராகரித்து பெரும் எதிர்ப்புப் போராட்டங்களை மிக ஆக்ரோஷமாக நடத்துவார்கள் என்பது வேறு கதை. அத்தோடு அவரது சிம்மாசன உரையின் பின்னரான பத்திரிகையாளர் மகாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் கொழும்பு கிளர்ச்சிக்காரர்களை ""பாசிச பயங்கரவாதிகள்"" என்றும் பாசிச பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டேன் என்றும் சபதம் செய்கிறார்.
பாசிச பயங்கரவாதிகள்
இங்கே தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளை ""பயங்கரவாதிகள்"" என்று மட்டுந்தான் இந்த சிங்கள தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக போராடுகின்ற சிங்கள மக்களை அவர்களின் பார்வையில் விடுதலைப் புலிகளைவிட மிக மோசமான பயங்கரமானவர்கள் என்று அவர் கொழும்பு கிளட்ச்சிக்காரர்களை ""பாசிச பயங்கரவாதிகள் "" எனக் குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக மேற்கொள்கின்ற வெகுஜன போராட்டங்களையும், ஜனநாயக முறைமை தழுவிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களையும் ரணில் அரசு தனது ராணுவ இயந்திரத்தை பயன்படுத்தி கொடூரமாக அடக்கி ஒடுக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இன்றைய இலங்கை பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தனியார்மயப்படுத்தல் இன்மையிலான தோல்வி மற்றும் வெளியுறவு கொள்கை சம்பந்தமான ஸ்திரத்தன்மையின்மை போன்றனவே இலங்கை பொருளாதாரத்தை பாதித்திருக்கிறது என்றும் கூறுகிறார்.
ரணிலின் வெளியுறவுக் கொள்கை
இதற்கு மாற்றீடா புதிய தெளிவான கொள்கை ஒன்றை முன் வைக்கிறார். இந்து மகா சமுத்திரம் இருபத்தோராம் நூற்றாண்டில் உலக அரசியலிலும், வர்த்தகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த இந்து மாசமுத்திரத்தின் மத்தியில் கேந்திர முக்கியத்துவமான பகுதியில் இலங்கை தீவு அமைந்திருக்கிறது இவ் அமைவிட கேந்திரத்தன்மை காரணமாக இலங்கைத்தீவிற்கு உலக அரசியலில் முக்கியத்துவமான பாத்திரம் உண்டு.
எனவே இலங்கை உலகளாவிய அனைத்து நாடுகளுடனும் வர்த்தக, அரசியல் கடற்போக்குவரத்து என்ற ரீதியில் உலகின் எந்த ஒரு நாட்டுடனும் தனியே சார்ந்து நிற்காமல் அனைத்து நாடுகளுடனும் சுதந்திரமாக உறவு கொண்டு இலங்கையை கட்டி எழுப்ப வேண்டும் என குறிப்பிடுகிறார்.
ராஜபக்சக்களின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவே முதன்மையானது என பேரளவிற்காயினும் கூறிக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்து செயற்பட்டார்கள் என்பது உண்மைதான்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ நேரடியாகவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் எந்த நாட்டுக்கும் முதன்மை கிடையாது என்பது தெளிவாக குறிப்பிடுகிறார்.
இதன்படி இந்தியாவிற்கென தனிமுதன்மை கிடையாது என்பதை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். அத்தோடு இன்றைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான வழிகளில் எங்களுக்கு உதவக் கூடியவர்கள் மேற்குலகமும், மேற்குலக நிறுவனங்களும் அவர்கள் சார்ந்த உலக வங்கி, சர்வேச நாணய நிதியம் போன்றவையே.
எனவே அவர்களுடன் நல்லுறவை வளர்த்து நாட்டை மீட்போம் என மேற்குலகம் சார்ந்த வெளியுறவு கொள்கையை தான் கடைபிடிக்கப் போவதாக குறிப்பிடுகின்றார். இது இந்தியாவை புறந்தள்ளி இந்துமா சமுத்திர பிராந்தியத்தின் இந்தியாவுக்கே உரித்தான புவிசார் அரசியலை புறந்தள்ளி அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், சீனா என்பவற்றோடும் நான் கைகோர்த்து நிற்பேன் என்று அவர் கூறுவது இந்தியாவின் இதயத்தில் ஆணி அறைந்தாற் போல் அமைந்துவிட்டது.