வரலாற்றில் முதல் தடவை... ரணில் கைது
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையினுடைய முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
தன்னுடைய மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா ஒன்றுக்காக லண்டன் சென்றிருந்த நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனடிப்படையில், இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
வரலாற்றில் முதன்முறை
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமையைக் கொண்டு பல குற்றச்செயல்கள், வழிவந்த அரசாங்கங்களால் விசாரணைக் கூட செய்யப்படாத சந்தர்ப்பங்கள் உண்டு என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எந்தவொரு அரசியல்வாதியும் தகுதி தராதரம் இன்றி கைது செய்யப்படுவர் என்ற பிரசாரத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல்வாதிகளை கைது செய்து வந்தது.
மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு 20 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இலங்கை அரசியலில் அதிர்வலைகள்
இந்த அடிப்படையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் வரலாற்றில் சுட்டிக்காட்டப்படும் தனித்துவமிக்கது என்பதுடன், இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
வரலாற்றில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்படாத இலங்கையில், முதன்முறையாக ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்தின் ஊடாக வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாததும், ஆளுமை மிக்கதுமான வரலாற்று தலைவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.
இலங்கை வரலாற்றில் அதிகமான தடவை பிரதமராக பதவி வகித்த ஒருவராகவும் ரணில் விளங்குகின்றார். இதை விட சிறப்பு அரசியல் பரப்பில் இவருக்கு “மிஸ்டர் க்ளீன்” என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர் ஊழலில் இறங்கமாட்டார். ஆனால் ஊழல் செய்வோரையும் கண்டுகொள்வது இல்லை என்ற வர்ணிப்பும் உண்டு.
சர்வதேசத்தில் தலைப்புச் செய்தி
ரணிலின் 40 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றில் எட்டாக்கணியாக இருந்த ஜனாதிபதி பதவியையும், பொருளாதார நெருக்கடியின் பின்னர், நாட்டின் அரச தலைவர்கள் புற முதுகிட்டு ஓடிய தருணத்தில் சுவைத்துப் பார்த்தவர்.
அதுவும், முதன்முறையாக தன்னுடைய தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்து ஜனாதிபதியாக தெரிவானார்.
இதனையடுத்து நாட்டின் பொருளாதார நிலைமைகளை ஓரளவு ஸ்த்திரநிலைமைக்கு கொண்டு வந்த ரணில் விக்ரமசிங்க பின்னாட்களில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கினாலும், மக்கள் கடந்த ஆட்சியாளர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பினால் மாற்றத்தை ஏற்படுத்தவென்று புதிய தரப்புக்கு ஆதரவு வழங்கி அநுரவை ஜனாதிபதியாக்கினர்.
சர்வதேச ரீதியிலும் நன்மதிப்பை வென்றவரும், உலகத் தலைவர்களுடன் ஆளுமைமிக்க தொடர்புகளைப் பேணியவருமான ரணில் விக்ரமசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச ரீதியிலும் தலைப்புச் செய்திகளாகியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




