கொழும்பில் ஓவியக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில்
கொழும்பில் இடம்பெற்ற மூத்த ஓவியக் கலைஞர்களின் கண்காட்சி ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.
கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியையே ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
குறித்த ஓவியக் கண்காட்சியானது, இரோமி விஜேவர்தனவின் கலை வாழ்க்கையின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'பெண்களைக் கொண்டாடுதல்' (Celebration of women) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வண்ணமயமான ஓவியங்கள்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஓவியக் கண்காட்சிகளை நடாத்தும் வின்ஸ்டன் சுலுதாகொட தனது 34ஆவது ஓவியக் கண்காட்சியை ‘பாவனவக சாந்திய' (தியானத்தின் அமைதி) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தார்.
ஓவியத் துறையில் 46 வருடங்களாக ஈடுபட்டு வரும் வின்ஸ்டன், வெளிநாடுகளிலும் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
அன்றாட வாழ்க்கை உறவுகள், உலகளாவிய நெருக்கடிகள், மத வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட பல வண்ணமயமான ஓவியங்கள் இந்த ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெற்றிருந்தன.
நினைவுப் பரிசு
ஓவியக் கண்காட்சிகளைப் பார்வையிட வந்த மக்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, சில குழு புகைப்படங்களிலும் இணைந்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |