ரணில்,சொல்ஹெய்ம் மற்றும் பிரபாகரனின் முயற்சியை தோற்கடித்தோம்-சுனில் ஹந்துன்நெத்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுனாமி நிவாரண சபையை எதிர்த்ததன் காரணமாகவே அன்றைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த தமது கட்சியினர் அதில் இருந்து வெளியேறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாட்டை பிரிக்கவே ரணில் அன்று பிரபாகரனுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார்

அன்று அரசாங்கத்தில் நான்கு அமைச்சு பதவிகளை வகித்த மக்கள் விடுதலை முன்னணியினர் என்ன செய்தனர் என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டை பிரிக்கவே அன்று நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம், வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தற்போது புண்ணியத்தில் ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையை செய்துக்கொண்டார் என்பது நாட்டில் உள்ள பலருக்கு தெரியாது.

அப்படியான வரலாற்றை கொண்ட ரணில் விக்ரமசிங்கவை தற்போது சிலர் தமது வீரராக மாற்றிக்கொண்டிருப்பது கேலிக்குரியது. எரிக் சொல்ஹெய்ம் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச சூழலியல் தொடர்பான ஆலோசகராக இருக்கின்றார்.
நாங்கள் நான்கு அமைச்சு பதவிகளை பெற்று என்ன செய்தோம் என்று கேட்கின்றனர். நானும் பிரதியமைச்சராக பதவி வகித்தேன். நாங்கள் கூட்டணி ஒன்றையும் அமைத்தோம். நாங்கள் அமைச்சு பதவிகளுக்கு பேராசையில் அதனை செய்யவில்லை.
எனினும் நாட்டுக்காக எமக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேற நேரிட்டது. சந்திரிக்கா சுனாமி நிவாரண சபையை கொண்டு வந்தார்.

அதேபோல் 2003 ஆம் ஆண்டில் எரிக் சொல்ஹெய்ம், பிரபாகரன் ஆகியோர் உடன்படிக்கைகளை ஏற்படுத்தினர். ரணிலை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தி,பிரபாகரன் மீசையை மழித்து கோட்சூட் அணிந்து நாட்டை பிரிக்கும் இடத்தை நோக்கி வரவே உடன்படிக்கையின் மூலம் முயற்சித்தனர்.
அன்று நாங்கள் ரணில் மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டு பேரின் முயற்சிகளையும் தோற்கடித்தோம். அன்று மகிந்த ராஜபக்ச, தற்போது பிரதமராக பதவி வகிக்கும் தினேஷ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேன, கண், காதுகளை மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ரணில்,மகிந்த,பசில் மற்றும் நாமலுக்கு மக்களின் உரிமையை இல்லாமல் செய்ய இடமளிக்க முடியாது

நாட்டுக்காக நாங்கள் சந்திரிக்காவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம். தெரியாதவர்கள் இதனை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ரணில், மகிந்த, பசில், நாமல் போன்றவர்களுக்கு நாட்டு மக்களின் மூச்சு விடும் உரிமையை இல்லாமல் செய்ய இடமளிக்க முடியாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக அழிந்து போன வடக்கு,கிழக்கு உட்பட நாட்டை மீளமைக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சுனாமி நிவாரண சபையை ஏற்படுத்த முயற்சித்தது.
பல தன்னாட்சி அதிகாரங்களை கொண்ட அந்த சுனாமி நிவாரண சபையை மக்கள் விடுதலை முன்னணி உட்பட சிங்கள தேசியவாத அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri