பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் ரணிலின் அரசியல்!
குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார்.
கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
தீர்வு திட்டத்தை வழங்க ரணில் தயார் இல்லை
இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை.
ஆனால் தமிழ் மக்களுக்கு ஏதோ ரணில் விக்ரமசிங்க பரிவு காட்டுகிறார் என்பது போலவும், அவர் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்கப் போகிறார் என்பது போலவும் சிங்கள ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகளை வெளியிடுகின்றன.
அதே நேரத்தில் சில மிதவாத தமிழ் தலைமைகள் எனப்படுவோர் அதனை ஆதரிக்கின்றனர். தேசியம் என பாசாங்கு அரசியல் நடத்தும் தலைவர்கள் அதனை எதிர்த்தும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழர்களை ஏமாற்றிய தொடர் வரலாறு
உண்மையில் இலங்கை அரசியலில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, பண்டாரநாயக்காவினதும் ராஜதந்திர சூழ்ச்சி வித்தை பற்றிக் குறிப்பிடுவது இங்கே சாலப் பொருத்தமானது.
மேற்குறிப்பிட்ட மூன்று பிரதமருடைய காலத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வேண்டி தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றபோது தமிழ் தலைவர்களை அழைத்து தமிழர் பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றுவதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு ஒத்துக்கொண்டதன் பிற்பாடு கொழும்பில் உள்ள இனவாதம் சார்ந்த ஏரிக்கரை பத்திரிகைகளையும் ஏனைய பத்திரிகைகளையும் அழைத்து "தமிழ் தலைவர்களின் நெருக்கத்தால் நான் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன் நீங்கள் எனக்கு எதிராக எழுதுங்கள்" என குறிப்பிடுவதும் அதனை அப்படியே சிங்கள இனவாத பத்திரிகைகள் மிகக் காட்டமாக செய்திகள் வெளியிடுவர்.
அதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கொதி நிலையை ஏற்படுத்திவிட்டு தமிழ் தலைவர்களை அழைத்து பத்திரிகைகளை காட்டி "இங்கே பாருங்கள் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் கொதிநிலை அபாயகரமாக உள்ளது. எனவே கொஞ்சம் அமைதியாக இருங்கள், ஆறுதலாக இதை நான் நிறைவேற்றுவேன்" என வாக்குறுதி கொடுத்து காலத்தை இழுத்து அடித்து ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் கிழித்து எறிந்து தமிழர்களை ஏமாற்றிய தொடர் வரலாறு ஒன்று இலங்கை தீவில் உள்ளது.
இத்தகைய ஏமாற்றுக்களை சிங்கள பத்திரிகையாளரான ஜே.எல் பெனான்டோ அவர்கள் 1963 ஆம் ஆண்டு எழுதிய “Three prime ministers of Ceylon” என்ற நூலில் தனது அனுபவக் குறிப்புகளை பதிவு செய்திருக்கிறார்.
பத்திரிக்கை செய்திகள்
இத்தகைய இலங்கைத் தலைவர்களின் தொடர்ச்சியாகவே 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை அமைப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமிர்தலிங்கத்துடன் ஒத்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் ஏரிக்கரை பத்திரிகையாளரை அழைத்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிராக செய்தி எழுதும்படி கூறினார்.
அதற்குமைய ஏரிக்கரை பத்திரிகைகளும் குணசேனாவின் சன் பத்திரிகையும் தினமின சிங்கள பத்திரிகையும் மாவட்ட அபிவிருத்திச்சபைக்கு எதிராக மிகக் கடுமையாக செய்திகளை வெளியிட்டன.
அதே நேரத்தில் ஏரிக்கரை தமிழ் பத்திரிகையான தினகரனும், குணசேனாவின் தமிழ் பத்திரிகையான தினபதியும் இச்செய்தியை மென்போக்காக எழுதின.
எனவே இந்த விவகாரங்கள் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.
இந்நிலையில் பௌத்த மகாசங்கங்களும் மிகக் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டன.
அதனை காரணங்காட்டி மாவட்ட சபை தீர்வும் கிழித்து குப்பை தொட்டிகுள் போடப்பட்டு அமிர்தலிங்கம் படுமோசமாக ஏமாற்றப்பட்டார்.
இவ்வாறுதான் சிங்களத் தலைவர்கள் தமிழ் தலைவர்களுடன் ஒப்பந்தங்களை செய்வதும், வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றிற்கு எதிராக சிங்கள பத்திரிகைகளையும், சிங்கள அறிஞர்களையும், பௌத்த மகாசங்கங்களையும் பயன்படுத்தி கடுமையாக எதிர்த்து செய்திகளை வெளியிடுவதும், போராட்டங்களையும் நடாத்தி சிங்கள தேசத்தில் ஒரு செயற்கையான கொதி நிலையை ஏற்படுத்திவிட்டு தமிழ் தலைவர்களை ஏமாற்றிய வரலாற்றையே தொடர்கதையக காணமுடிகின்றது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிக்கு பலியான திலீபன்
அவ்வாறுதான் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப் பல தடங்கல்களை இதே பாணியிலேயே ஜே.ஆர்.ஜெயவர்த்தன கைக்கொண்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்காக தியாக தீபம் திலீபன் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஆனால் இந்த நெருக்கடியையும் ஜே.ஆர்.பௌத்தமா சங்கத்தின் ஊடாகவே முறியடித்தார்.
அதாவது 6000 பெளத்தபிக்குகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதான செய்திகளை வெளியாக வைத்து செயற்கையான கொதிநிலை தோற்றப்பாட்டை காண்பித்தார்.
இதன் மூலம் இந்திய ராஜதந்திரிகளின் வாயை மூடவைத்தார்.
இவ்வாறுதான் அன்று திலீபன் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிக்கு பலியானார் என்பதுவே அரசியல் யதார்த்தமாகும்.
இங்கே மேலும் ஒன்றை கவனிக்க வேண்டும். இலங்கையில் வெளிவருகின்ற தமிழ் ஊடகங்களுடைய செய்திகளுக்கும், சிங்கள மொழியில் வருகின்ற ஊடகச் செய்திகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் ஒன்றை காண முடியும்.
சிங்கள ஊடகங்கள் தமிழ்த் தரப்புக்கு மிக எதிராகவும் காட்டமாகவும் இனவாதத்தைக் கக்கி செய்திகளை வெளியிடும். ஆனால் அத்தகைய செய்திகள் தமிழ் மொழி பத்திரிகைகளில் வருவது கிடையாது.
சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற செய்திகள் தமிழ் பத்திரிகைகளுக்கும் தெரியவருவதில்லை. எனவே தமிழ் மக்களுக்கும் தெரிவதில்லை.
பௌத்த சிங்களநாடு
இந்த பாரிய செய்தி வித்தியாசத்தை அறிந்துகொள்ள உதாரணத்துக்கு ஒரு நாளின் அனைத்து சிங்கள பத்திரிகைகளையும், தமிழ் பத்திரிகைகளையும், ஒருசேர எடுத்து வைத்து அவற்றின் ஆசிரியர் தலையங்கங்களையும், அவற்றின் பிரதான செய்திகளையும் எடுத்துப் பார்த்தால் இரண்டு மொழி பத்திரிகைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நன்கு புரியும்.
இரண்டு மொழி பத்திரிகைகளுக்கும் இடையில் எந்த தொடர்பையும் பார்க்க முடியாது.
அப்படித்தான் தமிழ அரசியல் தலைமைகள் தங்கள் கதிரரைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதற்காக தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல, சிங்களத் தலைவர்களோ பௌத்த சிங்களநாடு என்பதை வலியுறுத்துவதான செய்திகளை சொல்வதாகவே அமைவதைக் காணலாம்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியில்தான் தற்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருக்கின்ற அனுராதா ஜஹம்பத் சில தினங்களுக்கு முன்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையும், அதன் பின்னர் அவர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் வட-கிழக்கு மாகாணங்களை இணைக்கும் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இனக் கலவரம் உருவாகும் என்றும் அதனால் 13ஆம் திருத்தச் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பாதுகாப்புக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கிழக்கு மாகாண ஆளுநர் பௌத்த சிங்களக் கடும்போக்கு தேசியவாத “வியத்மஹ" அறிஞர் குழுமத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகத்தான் ரணில் மல்வத்த, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்தமையும் அதன் பின்னர் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் கூட்டாக இணைந்து அடுத்த கட்ட அரசியல் நகர்வினை மேற்கொண்டுள்ளனர்.
அது என்னவெனில் நாட்டின் சுதந்திரம், ஆள்புல ஒருமைப்பாடு, மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்படும் என்பதனால் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என கோரும் அவசர கடிதம் ஒன்றை மகாநாயக்க தேரர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்ட விடயத்துக்கு எதிரான ஒரு கொதி நிலையை சேர்க்கையாகவே சிங்கள ராஜதந்திரம் தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி தற்காலிகமாக இந்தியாவின் அழுத்தத்தை பின் தள்ளிப் போடுவதற்கான அத்திவாரங்கள் இடப்பட்டுவிட்டன.
உள்ளூராட்சி சபைக்கான தேர்தல்
அதே நேரத்தில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் திகதியையும் அரசு அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை கைவிட்டுவிட்டு தங்களுக்கான சுயநல கதிரை அரசியல் போட்டிக்காக மிகக் கடுமையாக வாளெடுத்து போர்புரிய தொடங்கி விட்டனர்.
அதேநேரத்தில் சிங்கள தரப்போ 13ஆம் திருத்தச் சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. அவ்வாறே தமிழ் தரப்பில் தேசியம் பேசுகின்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் அதனை கடுமையாக எதிர்க்கிறது.
அத்துடன் மேற்படி தேர்தல் சூழலில் 13 ஆவது ஏற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் சூட்டைக் கிழப்பி அடிபட்டுப்போக முடியும் என்பதால் உள்ளூராட்சித் தேர்தலையும் அறிவித்து அதன் பின்னணியில் ரணில் இந்தியாவுக்கும் கயிறுவிடும் வகையிற் காயை நகர்த்தி உள்ளார் என்பது மிக முக்கியமான இராஜதந்திர வலையாகும்.
எதிரிக்கு சேவகம் செய்தல்...!
பொதுவாக அரசியலில் எதிரி எதை எதிர்க்கிறானோ அதை ஆதரிப்பதும், எதிரி எதை ஆதரிக்கிறானோ அதனை எதிர்ப்பதும் தான் பரஸ்பர அரசியல் நலன்களை பெறுவதற்கான பேரம் பேசலுக்கான களமாக அமைய முடியும்.
ஆனால் எதிரி எதிர்ப்பதை நாமும் எதிர்ப்பது என்பது எதிரிக்கு சேவகம் செய்வதாகவே அமையும்.
எனவே ரணிலின் இந்த அரசியல் சூழ்ச்சிக்கு தமிழ் காங்கிரசும் ஒத்துப்போய் எதிரிக்கு சேவகம் செய்வதையே வெளிகாட்டுகிறது.
வெறும் வாய்ப்பேச்சில் தேசியம் என்று பேசிக்கொண்டு தமிழ் மக்களுக்கு தீங்கான பாதையை இவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
“ஒரு செயல் தரவல்ல விளைவுகளில் இருந்துதான் அந்தச் செயயலை எடைபோட வேண்டும்” என்பதுதான் இங்கே முக்கியமானது.
அவ்வாறே இலங்கை தமிழரசு கட்சி ரணில் ஏதோ தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு திட்டத்தை தரப் போகிறார் என்றும், அந்த தீர்வு பொதியைத்தான் தாங்கள் சுமந்துவரப் போகிறோம் என்றும் ஒரு போக்கை தமிழ் மக்கள் மத்தியில் காட்டுகின்றன.
சிங்கள தேசத்தின் அரசியல் சூழலில் அனைத்து சிங்கள தரப்பும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இங்கே தமிழரசு கட்சி ஏற்கனவே இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வீட்டு சின்னத்தை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி வெளியே நிற்கிறது.
இன்றைய அரசியல் சூழலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு குடைக்கீழ் நின்று தமிழ் மக்களுடைய நலனுக்காக போராடாமல் தனித்தனியே பிரிந்து நின்று வேறுபட்ட பொய்யான கோஷங்களை எழுப்பிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எந்த நலனையும் கிடைக்கச் செய்யாமல் தமிழினத்தை அழிக்கும் பாதையில் சென்று தன்னின உண்ணி அரசியல் தலைவர்களாக இருப்பது இலங்கை தீவில் தமிழினத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இன்றைய இந்தக் கொதி நிலையிலாவது தமிழ் தலைவர்கள் தமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளை கடந்து ஒரு தமிழ் தேசிய கூட்டு முன்னணி ஒன்றை உருவாக்கி தமிழினத்தை பாதுகாப்பதற்காக போராடாவிட்டால் தமிழினத்தை அழித்த குற்றம் இந்த அரசியல் தலைமைகளுடையது என்றே வரலாறு பதிவு செய்யும்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
