13இன் பிரதியை தீயிட்டு கொளுத்திய பிக்குமார்! வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர் - கொழும்பில் பதிவான பதற்ற நிலை (video)
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை உலக வர்த்தக மைய கட்டடப் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகப் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் புறக்கோட்டையில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி விரைந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
எட்டாம் இணைப்பு
கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து வீதியை மறித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.
ஏழாம் இணைப்பு
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பிரதான வீதியை மறித்து ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் போராட்டம் நடத்த தடை உத்தரவு பெற்று வந்த பொலிஸாரை “ஊ” கூச்சலிட்டு போராட்டக்காரர்கள் விரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆறாம் இணைப்பு
கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியை போராட்டக்காரர்கள் இடைமறித்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் இணைந்து தற்போது புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் இணைப்பு
துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் கொழும்பு - மல்வத்த வீதியின் ஊடாக புறக்கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
புகையிரத நிலைய பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்காகவே அவர்கள் அப்பகுதிக்கு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு கோட்டை - லோட்டஸ் சுற்றுவட்ட வீதியை பொலிஸார் மூடியுள்ளனர்.
தொழிற்சங்கத்தினர் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் இன்றைய தினம் போராட்டம் மேற்கொண்டு வந்த பிக்குமார் அரசாங்கத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கி போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் தமக்கு இதற்கான பதில் வழங்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு தமக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் ஆயிரக்கணக்கான பிக்குமாரை ஒன்றிணைத்து மிகிந்தலையில் இருந்து பாரிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் பொலிஸாரின் தடையை மீறி நாடாளுமன்ற பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
13ஆவது திருத்தத்திற்கு எதிராக பிக்குமார் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
“இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என பிக்குமார் வலியுறுத்தியுள்ளனர்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.
இரண்டாம் இணைப்பு
13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் தற்போது பிக்குமார் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வரும் பகுதியில் சற்றுமுன் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தேரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிக்குமாருக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பிக்குமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் இன்றைய தினம் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (08.02.2023) கொழும்பு நோக்கி பயணிக்க உள்ளனர்.
இன்று காலை அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்க உள்ளதாக மைத்ரி நிக்காயே பௌத்த பிக்குகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
முற்பகல் 9.30 க்கு விக்டோரியா பூங்காவுக்கு அருகில், அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேரர்கள் எதிர்ப்பு
இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13ஆம் திருத்தத்தை நீக்கக் கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடிவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் ஒன்றிணைவில் இந்த எதிரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதான எதிர்ப்பு பேரணி கொழும்பு - ஹைட்பார்க்கில் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இதேவேளை தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் குழந்தைகள், மகப்பேறு மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு கோட்டையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
