ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை - சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள்
சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன்போது 30 அமைச்சரவை அமைச்சர்களும் 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னி ஆராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை பொதுஜன பெரமுன பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் எம்.பிகளுக்கு அமைச்சு பதவி
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பி.எம். ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் பி.எம். ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.