நான்கு மாதங்களில் முடிவிற்கு வரும் ரணில் ராஜபக்சவின் ஆட்சி! ஹிருணிக்கா பகிரங்க எச்சரிக்கை
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நான்கு மாதங்களில் ரணில் ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முகப்புத்தகத்தில் நேரடி காணொளியொன்றினை வெளியிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் முடிவிற்கு வந்துள்ளது. வெறுமனே உரிமைகளுக்காக போராடிய அப்பாவி மக்கள் இன்று எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
காரணமுமின்றி கைது செய்யப்படும் நிலை
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில்,நாட்டில் அவசரகாலச்சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வெறுமனே வீதிக்கு இறங்கும் அப்பாவி மக்கள் கூட எந்த காரணமுமின்றி கைது செய்யப்படும் நிலையேற்பட்டுள்ளது.
என்னையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக எனக்கு தகவல் வெளியாகியுள்ளது.இந்த நாட்டினை பொறுத்தமட்டில் நியாயத்திற்காக போராடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணில் ராஜபக்சவின் ஆட்சி விரைவில் முடிவிற்கு வரும். அடுத்த வருடத்திற்குள் இந்த நிலைமை முற்றுமுழுதாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.