நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை: விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ரணில்
டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனால் சிறந்த உலகை உருவாக்க வலுவான மற்றும் ஒன்றிணைந்த அணிசேரா அமைப்பின் ஊடாக இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உகண்டா - கம்பாலா நகரில் “உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக் கொள்ளல்” என்ற தொனிப்பொருளின் கீழ் உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவேனியின் தலைமையில் 120 நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (19.01.2024) ஆரம்பமான 19ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வலயத்தின் பாதுகாப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், அணிசேரா நாடுகளின் 19 மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ளமைக்காக உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். தென்துருவ நாடுகளுக்கிடையில் பொது தெரிவுகள் காணப்பட்ட வேண்டிய தீர்மானமிக்க தருணத்தில் உகண்டா அதற்கான களத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளமை காலோசிதமானதாகும்.
இந்நிலையில், தொற்றுநோய் பரவல், கடன் சுமை, காலநிலை அனர்த்தங்கள், புதிய உலகளாவிய போட்டிகள் மற்றும் உலக நாடுகளும் தென் துருவமும் எதிர்கொண்ட பல்வேறு அழுத்தங்களின் பின்னர் நடத்தப்படும் முதலாவது அணிசேரா நாடுகளின் மாநாடு இதுவாகும்.
நாம் இங்கு சந்திக்கும் வேளையில் காஸா பகுதிகளிலும் அதற்கு அப்பாலான பகுதிகளிலும் மனிதாபிமான மோதல்கள் நீண்டுச் செல்கின்றன. மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன சிவில் மக்கள் துயரங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவருவதோடு, வலயத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை என்பனவும் கேள்விக்குறியாகியுள்ளன.
காசா பிரச்சினைகள்
இதுவரையிலும் அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காத்தது. காசா எல்லைகள் அழிவடையும் வேளையில் நாம் எவ்வாறு அமைதிகாப்பது? அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை போலவே அங்கு அதிகளவான அப்பாவி சிவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.நாமும் அமைதி காப்பதால் அதற்கு இணக்கம் தெரிவிப்பதை போல் உள்ளது.
உகண்டாவின் தலைமையில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 19 ஆவது மாநாட்டின் ஊடாக காசா பகுதிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் பாலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் சுயாதீனமானதும், சுதந்திரமானமான உரிமைகளை பறிக்க முடியாது என்ற விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது.
நாம் இப்போது பனிப்போரின் பின்னரான நிலைமைகளின் இறுதி நிலை மற்றும் மாற்றம் கண்டு வரும் பல்முனை உலகின் அணுகுமுறைகளை காண்கிறோம். புவிசார் அரசியல் முன்னணியில், முன்னைய பலவான்கள் மற்றும் பலவான்கள் என்ற அந்தஸ்த்தை தக்கவைக்கும் நோக்கில் செயற்படும் தரப்பினர்களுக்கு மத்தியில் மறைமுகமான மற்றும் வெளிப்படையான மோதல்கள் மீண்டும் வெடிப்பதையும் நாம் காண்கிறோம்.
டிஜிட்டல் பிரிவினை
புதிய வர்த்தக முறை குறித்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு, உலக வர்த்தக அமைப்பின் பன்முகத்தன்மையை மேற்கத்திய நாடுகளால் புறக்கணிக்கப்பட்டிருப்பதை காண்பிக்கிறது. டொலர் ஒரு ஆயுதமாக மாறிவிட்டது. பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடி, காலநிலை, நீதி, உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு ஆகியவை புதிய சவால்களாக மாறியுள்ளன.
டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை உருவாகியுள்ளது.
“உலக சுபீட்சத்துக்காக ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளல்” என்ற இந்த மாநாட்டின் தொனிப்பொருள், நமது உலகின் இரு துருவங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் எனில், அனைவருக்குமான சிறந்த உலகை கட்டியெழுப்புவதற்கான வலுவான மற்றும் ஒன்றுபட்ட அணிசேரா அமைப்பொன்று அவசியப்படுகிறது..
தென் துருவம்
சில ஆசிய, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அடைந்த விரைவான முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2050 ஆம் ஆண்டாகும்போது, உலகின் முதல் பத்துப் பொருளாதாரங்களில் பெரும்பான்மையான நாடுகள் இந்த அமைப்பிற்குச் உரித்ததானவையாக இருக்கும்.
மேலும், பல்முனை உலகில் தென் துருவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டாக அணிசேரா நாடுகளின் அமைப்பை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தென் துருவம் எதிர்கொள்ளும் சமகால சவால்களை சமாளிக்கும் திறன் கொண்ட நிரந்தர செயல்பாட்டுக் கட்டமைப்பை நிறுவுவதற்கு நாங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். மேலும், இந்த புதிய ஒழுங்கை வடிவமைக்கும் திறன் கொண்ட அமைப்பாக நாங்கள் மாற வேண்டும்.
எமது எதிர்காலம் நம் கையில் உள்ளது. அதை உருவாக்கும் அல்லது அழிக்கும் திறனும் நம்மிடமே உள்ளது. அதனை நாம் செய்வோம். அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர்கள் அமர்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக உகண்டா ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும், குறித்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
