ஜனாதிபதி தேர்தலில் மக்களின் முடிவு தொடர்பாக ரணிலின் கணிப்பு
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (13) கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகள்
அத்துடன், சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.
பாதாள உலகக் குழுக்களுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜயவர்தன, “எங்களுக்கு இந்த அரசாங்கம் பிடிக்கவில்லை. இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். ஆனால் நாம் அதை ஜனநாயகக் கட்டமைப்பில் செய்ய வேண்டும்” அதேபோன்று, “இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்” எனவே பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு நான் பூரண ஆதரவை வழங்குகின்றேன். இது எனக்கு விருப்பமான அரசாங்கமாக இல்லாவிட்டாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்று கூறினார்.
அன்றிலிருந்து இன்று வரை எங்களிடம் அந்த கட்டமைப்பு உள்ளது. 1989ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அனுருத்த ரத்வத்த ஆகியோர் ஜனாதிபதி பிரேமதாசவைச் சந்தித்து “எங்களுடைய முழு ஆதரவையும் உங்களுக்கு வழங்குகிறோம்” என்று அறிவித்தனர்.
அதுதான் நமது வரலாறு. நீங்கள் 2022 ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டியதினால், 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி, ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இந்த நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |