இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், ரணிலுக்கு எதிராக முதலாவது வழக்கு!
நடப்பு பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்களை விசாரணை செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதல் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கலாநிதி அதுல குமார சமரகோன், சூசையப்பு நேவிஸ் மொரைஸ் மற்றும் கலாநிதி மஹிம் மெண்டிஸ் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அலி சப்ரி, உட்பட முழு அமைச்சரவையின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் திறைசேரி முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபயவின் (விஸ்டாஸ் ஒப் ஸ்பெரிட்டி) என்ற “செழிப்பான பார்வை” தேர்தல் விஞ்ஞாபனத்தின் கீழ் வரிக்குறைப்பும் இன்றைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2022, ஏப்ரல் நிலவரப்படி, முன்னையஆண்டை விட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்: (அ) பெட்ரோல் விலை 85% அதிகரித்துள்ளது, (ஆ) டீசல் விலை 69% அதிகரித்துள்ளது, (இ) திரவ பெட்ரோலிய எரிவாயு கொள்கலனின் விலை 84% அதிகரித்துள்ளது, (ஈ) மஞ்சளின் விலை 443% அதிகரித்துள்ளது, (இ) ரொட்டியின் விலை 433% அதிகரித்துள்ளது, (ஊ) அரிசி 93% அதிகரித்துள்ளதுமற்றும் (g) பருப்பின் விலை 171% அதிகரித்துள்ளதாக, மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி அதிகாரிகளின் ஆட்சேபனைகள் இருந்தபோதும், டொலரின் கையிருப்புகளைப் பயன்படுத்தி ரூபாவின் அகப்பெறுமதியை 105 ஆக வைத்திருக்க அறிவுறுத்தல்களும் நெருக்கடிக்கு காரணம் என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.