இந்திய ஜனாதிபதியை சந்தித்த ரணில்: இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதுதில்லியில் உள்ள ராஸ்டிரபதி பவனில் இருவரும் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக ஜனாதிபதி விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார், இதன் போது பலதரப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இலங்கைக்கு மலிவு மற்றும் நம்பகமான எரிசக்தி வளங்களை வழங்குவதை உறுதி செய்யும் முயற்சியில், இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பல உற்பத்தி பெட்ரோலிய குழாய்களை அமைப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளன.
அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான முயற்சி
இதற்கிடையில், இலங்கையில் மின்சாரச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், தீவுக்கு மதிப்புமிக்க மற்றும் நம்பகமான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான முயற்சியில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே அதிக திறன் கொண்ட மின்சாரக் கட்டத்தை நிறுவுதல் குறித்தும் இரண்டு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை மற்றும் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் மற்றும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான மக்கள் தொடர்பு தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான நில அணுகலை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க இருவரும், இந்த பகிரப்பட்ட விடயங்களை விரைவாக செயற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
பிராந்திய மையமாக மேம்படுத்தப்படும் திருகோணமலை
இந்தியாவும் இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான இணக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் உள்ள திருகோணமலை நகரை ஒரு பிராந்திய மையமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |