ஞானசாரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பான உண்மையை வெளியிட்ட ரணில்
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட முடிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த பௌத்த தேரரின் காவியுடையை அகற்றுவதால் ஏற்படக்கூடிய மத ரீதியான விளைவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் சட்டத்தரணிகள் கூட்டத்தில் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவியுடையை அகற்றுவது தொடர்பில் மதத் தலைவர்கள் கவலை ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது, அவரது காவியுடையைத் தொடர்ந்து அணிய ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள வெளியிட்ட கடிதத்தில், ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்படாது என பௌத்த மதத் தலைவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பௌத்த பிக்குகளின் ஒழுக்க விதிகளின்படி, காவியுடையை அகற்றும் அளவுக்கு உரிய குற்றமாகக் கருதப்படாத ஒரு குற்றத்துக்காக அவரது காவியுடையை அகற்றுவது பாரிய மத சர்ச்சையை ஏற்படுத்தும் எனப் பல மூத்த பௌத்த தேரர்கள் கவலை வெளியிட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மன்னிப்பு
மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் இந்த விவகாரம் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அதன் பின்னர், ஞானசார தேரர் சுமார் ஒரு வருடம் சிறைத்தண்டனையை அனுபவித்திருந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பல அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடியதாகவும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் முடிவுக்கு ஆதரவளித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மத ஒழுக்கம் தொடர்பான விவகாரம் இந்த விவகாரம் ஆரம்பத்தில் நீதிமன்றத் தீர்ப்புடன் தொடர்புடையதாக இருந்தபோதிலும், பின்னர் அது பௌத்த மத ஒழுக்கம் மற்றும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பின் பொறுப்பு தொடர்பான கேள்வியாக மாறியதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 9ஆம் உறுப்புரையின் கீழ் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் அரசுக்கு உள்ள பொறுப்பையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய முடிவுகள்
மேலும், ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்கும்போது விரிவான எழுத்துப்பூர்வ விளக்கங்கள் வழங்கப்படாத நடைமுறையையும் ரணில் விக்ரமசிங்க ஆதரித்துள்ளார்.
இத்தகைய முடிவுகள் வரலாற்று ரீதியாக ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்களின் பின்னரே எடுக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கை மாற்றுத் தெரிவுகளுக்கான மையம் மீது விமர்சனம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான சர்ச்சையைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, கொள்கை மாற்றுத் தெரிவுகளுக்கான மையம் (Centre for Policy Alternatives – CPA) மீதும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மத ரீதியான காரணிகளை உள்ளடக்கியதாகத் தாம் விவரித்த இந்த முடிவுக்கு அந்த அமைப்பு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.