அரசியல் வரலாற்றில் முதன்முதலாக திணறிய ரணில்! பரபரப்பை ஏற்படுத்திய ஊடகத்தின் கேள்விகள்
50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச ஊடகமொன்றின் கேள்விகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திணறடித்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள், உலக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர் என பெயர் பெற்ற ஒருவர்.
இவ்வாறிருக்க, அரகலய போராட்டம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச ஊடகத்தின் கேள்விகளுக்கு ரணில் பதிலளிக்க முடியாமல் திணறுவதை அவதானிக்க முடிந்தது.
இது தற்போது பெரும் சர்ச்சையாகவும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

ரணிலுக்கு எதிராக சர்வதேசத்தில் திட்டமிடப்பட்ட சதி! சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பில் வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்
ஐரோப்பிய ஒன்றியம்
குறித்த நேர்காணலின் போது, ஐரோப்பிய ஒன்றியம் வேறு சில அமைப்புக்களுக்கு நிதி வழங்கி தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கு முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதே ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்ட இலங்கையை மீட்டெடுத்தமைக்காக தன்னை பாராட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கிய நீங்கள் எவ்வாறு மக்களின் நண்பன் ஆக முடியும் என நேர்காணலின் ஒலிபரப்பாளர் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிம் போராட்டக்காரர்களை கையாண்ட விதம் தொடர்பில் ரணிலை விமர்சித்திருந்ததையும் ஒலிபரப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ரணில், ஐரோப்பிய ஒன்றியம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டது என விமர்சித்தார். மேலும், போராட்டக்காரார்களில் சிலர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கொன்றமையினாலேயே பாதுகாப்பை பலப்படுத்தியதாக அவர் கூறினார்.
இதன்பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது உங்களுக்கு வெறுப்பு உள்ளதா என கேட்ட போது, இல்லை, ஒன்றியத்தை நான் இன்னும் விரும்புகிறேன் என ரணில் பதிலளித்தார்.
பணம் இருக்கவில்லை
இதேவேளை, 2023ஆம் ஆண்டு தேர்தலை நடாத்த முடியாமல் போனதுக்கு என்ன காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு எங்களிடம் தேர்தலை நடத்துவதற்கான பணம் இருக்கவில்லை என ரணில் கூறினார்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரித்தானிய மகாராணியினதும் முன்னாள் ஜப்பான் பிரதமரினதும் இறுதி சடங்கிற்கு செல்ல மட்டும் உங்களிடம் பணம் இருந்தது என ஒலிபரப்பாளர் விமர்சித்தார்.
அதற்கு பதிலளித்த ரணில், அவை 2022ஆம் ஆண்டுக்கான செலவுகள் எனவும் தேர்தல் 2023ஆம் ஆண்டுக்கான செலவு எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதில் ஒன்றும் தவறில்லை என ரணில் பதிலளித்தார்.
திருச்சபையின் அரசியல்
மாலைதீவுக்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டமை குறித்தும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையில், கோட்டாபய மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இருக்கவில்லை. எனவே அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பதற்கு நான் சர்வாதிகாரி இல்லை என ரணில் தெரிவித்தார்.
ராஜபக்சக்களின் துணையுடன் தான் உங்களுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்தது என கூறப்பட்டமைக்கு பல தமிழ் எம்.பிக்களும் எனக்கே ஆதரவு வழங்கினர் என ரணில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்பட்ட போது அரசாங்கத்தின் தோல்வியை கத்தோலிக்க திருச்சபை விமர்சித்திருந்ததை ஒலிபரப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளிக்கையில், இது கத்தோலிக்க திருச்சபையின் அரசியல் என ரணில் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நான் ஒருபோதும் காப்பாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |